Breaking News
பண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும்

பண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும்

பண்டிகைக் காலமும் பட்டாசின் ஆரவாரமும்

ஏதோ ஒரு நோக்கத்தினடிப்படையிலோ அல்லது சிந்தனையின் அடிப்படையிலோ கட்டமைக்கப்பட்ட கலாசார பண்பாட்டு நிகழ்வுகளானவை இன்று கேளிக்கை மற்றும் களியாட்ட செயற்பாடுகளால் தடம் புரண்டு திசைமாறிச் செல்வதனை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தமிழரெம் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விழுமியங்களையும் பறைசாற்றி நிற்கும் மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகளானவை இன்று கேளிக்கை நிகழ்வுகளாக மாறி வருவது கவலைக்குரிய விடயமாகும். பண்டைய காலத்திலிருந்து குறிப்பிட்ட காலம் வரை பண்டிகைகளின் சிறு பாகங்களாக விளங்கிய உறியடித்தல், தலையணைச்சண்டை. வெடி வெடித்தலுடனான வான வேடிக்கைகள், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்ற பல பாரம்பரிய நிகழ்வுகளில் பல வழக்கிழந்து வரும் அதே வேளை பண்டிகைகளின் சிறு பாகமாக விளங்கிய வெடி வெடித்தலுடனான வான வேடிக்கையின் முக்கியத்துவம் அதிகரிக்கும் அதே வேளை பண்டிகைக்கு வழங்கும் முக்கியத்துவம் குறைவடைவதும் , அந் நிகழ்வுகளால் விளம்பி நிற்கும் கலாசார மற்றும் விழுமியப் பண்புகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஊடகமான பண்டிகைகளின் தனித்துவம் மருவிச் செல்வதென்பது மானிடனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

அவ்வகையிலே இன்று சுப நிகழ்வுகளான பண்டிகைகள் , திருமண வைபவம் மற்றும் மரணச்சடங்கிலே பட்டாசு கொளுத்துவதென்பது முதலிடம் பெறுகின்றது. “பட்டாசு” என்ற ஒற்றை வார்த்தையை கேட்கும் போது அனைவர் மனதிலும் தோன்றுவது வண்ணமயமான ஜாலங்களும் பிரகாசமுமே. ஆனால் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் கொண்டாட வேண்டிய பண்டிகைகளும் , அமைதியாக நடாத்த வேண்டிய மரணச் சடங்குளும் பட்டாசு வெடித்தலின் காரணமாக் சலனம் நிறைந்த சூழலில் பல எதிர் மறை எண்ணங்களுடன் நடந்தேறுகின்றது என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் சிந்திக்கத் தவறி சொற்ப சந்தோசத்தை அனுபவிக்கும் குறுகிய மனப்பான்மை படைத்தவர்களாக மாறி வருவது கவலைக்கிடமான விடயமாகும். ஒரு நாணயத்திற்கு எவ்வாறு இரண்டு பக்கங்கள் காணப்படுகின்றதோ அதே போலவே பட்டாசு வெடிப்பதிலும் இரண்டு பக்கங்கள் காணப்படுகின்றன. எனினும் பட்டாசு வெடிப்பதால் நேர்மறையான தாக்கத்தை விட எதிர் மறையான தாக்கமே அதிகளவில் காணப்படுகின்றது. அவ்வகையிலே சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சினைககள், உடலியல் மற்றும் உளவியல் தாக்கங்கள், சமூக அந்தஸ்துடன் கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள் என்ற வகையில் இத் தாக்கங்களைப் பார்க்கலாம்.

குறிப்பாக பண்டைய காலத்திலே சூழலாதிக்கவாதம் மேலோங்கி மனிதர்கள் அனைவரும் இயற்கைக்குக் கட்டுப்பட்டு இருந்தமையினால் இயற்கை அன்னை தனது வளங்களை அள்ளிக் கொடுத்தமையினால் மக்கள் மகிழ்ச்சியானதும் அமைதியானதுமான உன்னதமான வாழ்க்கையினை வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நவீன யுகத்திலே சூழல் ஆதிக்க வாதத்தைவிட மானிட ஆதிக்க வாதத்தின் தாக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இதனால் மனிதன் இயற்கையினை வெல்ல முற்படும் போது இயற்கையும் சீற்றம் கொண்டு தன் சீற்றத்தினை வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடித்தல், சூறாவளி, வெப்பமயமாதல் போன்ற பல வடிவங்களில் வெளிப்படுத்துகின்றது.. இதனால் சூழல் மாசடைவு உட்பட பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் காரணங்கள் பல காணப்பட்டாலும் பட்டாசு வெடிப்பதும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆரம்ப காலங்களில் நிகழ்வுகளில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்கப்பட்டது. உதாரணமாக தைப்பொங்கல் பண்டிகையின் போது பால் பொங்கி வரும் போது மட்டுமே வீட்டில் வெடி வெடித்தனர். இதனை “தைத் திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்……” எனும் பாடலில் “ வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள்” எனும் பாடல் அடியானது ஒரு நேரத்தில் மட்டும் வெடி வெடித்தமையினைக் காட்டுகின்றது ஆனால் இன்று பண்டிகை ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இருந்து பண்டிகை முடிவடைந்த பின்னரும் வீடுகளில் மட்டுமல்லாது வீதிகள், பாடசாலைகள் , பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் வெடி வெடித்தல் நாகரிகமாக மாறியது மட்டுமல்லாது அளவோடு வெடிக்கப்பட்ட வெடிகளானவை இன்று நூறுகள் ஆயிரங்களைத் தாண்டிச் செல்கின்றது.

அந்த வகையில் நிலம், நீர், வளி, உயிரியல் ஆகிய நான்கு வகைச் சூழலும் மாசடைகின்றது. குறிப்பாக வெடி பொருட்களில் காணப்படும் அலுமினியம், சல்பர், பேரியம் (டீயசரைஅ)இ பொட்டாசியம், பெர்க்ளோரேட் (Pநசஉhடழசயவந) என்பனவும் வெடி பொருள் ஆக்கப் பயன்படும் ஏனைய மக்காத கூறுகளும் நிலம் , நீரினை சேர்வதனால் நிலவாழ் அங்கிகளுடன் கூடிய நிலச் சூழலும் நீர் வாழ் அங்கிகளுடன் கூடிய நீர்ச் சூழலும் நிலத்தடி நீரும் மாசுபடுவதனால் எதிர்காலத்தில் தண்ணீர் மாசடைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிப்படையும்.

மேலும் பட்டாசுகள் மிக உயர்ந்த அளவிலான ஒலியினை உருவாக்குவதனால் மனிதனது கேட்கும் திறன் 85 டெசிபலாக உள்ள போது பட்டாசுகள் 140 டெசிபலினை விட அதிகளவிலான ஒலியினை ஏற்படுத்துவதனால் இவ் ஒலிகள் கேட்கும் திறனில் இயலாமையினை உருவாக்கி காதுகள் நிரந்தர செவிடாதலுக்கு உட்படும் நிலையினைக் காணலாம். இவற்றோடு உயிரினச் சூழலினை நோக்குவோமாயின் மனிதன் உட்பட அனைத்து உயிரினப் பல்வகமையின் சமநிலை சீர் கெடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு விலங்கனத்தினதோ அல்லது பறவையினத்தினதோ இருப்பிடத்திலோ அல்லது அவை செல்லும் போக்கிடத்திலோ வெடி வெடிப்பதனால் அவற்றின் வாழ்க்கைக் கட்டமைப்பு மாற்றமடையும். இதனால் மகரந்த சேர்க்கையிலிருந்து இனப் பெருக்கம் மற்றும் உணவுச் சங்கிலியென அனைத்து விதமான செயற்பாடுகளும் பாதிப்படைவதனால் பல அரிய வகை உயிரினங்கள் அழிவடைவது மட்டுமல்லாது எதிர் காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் நிலவக் கூடிய நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பட்டாசு எரியும் போது தீ விபத்து ஏற்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. உதாரணமாக 2019 ஜனவரி புத்தாண்டு அன்று ஓவர்பேக் கடற் கரையில் ஒருவர் எரிந்து இறந்ததுடன் மூவர் காயமடைந்தனர். மேலும் பட்டாசு எரியும் போது அதிகப் படியான உலோகத் துகள்கள், கந்தகக் கலவை, கன உலோகம், சல்பர் ஒக்சைட், உட்பட பல இரசாயனத் துகள்கள் வெளிவருவதனால் வீதியெங்கிலும் பனிமூட்டமான புகை மூட்டம் உருவாகுவதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வீதி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கின்றன. கடந்த சில வருடங்களில் இந்தியாவின் டெல்லி மற்றும் சீனாவின் பீஜிங்கில் பட்டாசுப் புகையால் ஏற்பட்ட பாரிய சிக்கலால் இவ்விரு நாட்டிலும் வெடி வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டமையினை அவதானிக்கலாம். அவற்றோடு இப் புகையினால் வளி மாசடைவதனால் சுவாசம் தொடர்பான நோய்கள் தோல் நோய்கள், போன்றன ஏற்படுவது மட்டுமல்லாது தற்போது பெருகி வரும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுவதனை கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டாயமான சூழலில் நாம் அனைவரும் உள்ளோம்.

மேலும் சமூகத்திலே அடி மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவ்வகையில் பட்டாசு வாங்கும் போதும் தத்தமது அந்தஸ்திற்கேற்ப பட்டாசினைக் கொளுத்தும் போதும் சமூக ஏற்றத் தாழ்வு ஏற்படுவது மட்டுமல்லாது பட்டாசினை வாங்க முடியாதவர்கள் கடன் பெற்றுப் பட்டாசினை வாங்குவதனால் சமூகத்தில் முரண்பாடுகள் தோன்ற வழிவகுக்கின்றன. இதைவிட இவ்வுலகில் எத்தனையோ உயிரினங்கள் ஒரு நேர உணவிற்குக் கூட கஸ்ரப்படும் போது அதிகரித்து வரும் ஆடம்பர செலவான வெடி வெடிப்பதற்கு செலவிடும் செலவினைக் குறைத்து வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்களிற்கு உதவுவதன் மூலம் ஒவ்வொருவரும் தத்தமது நாட்டின் வறுமை வீதத்தைக் குறைத்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பட்டாசு வெடிப்பதனால் அனைத்து உயிரினங்களும் உடலியல் மற்றும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுகின்றன. குறிப்பாக வெடி வெடிக்கும் போது அவை உயிரினங்களில் அவயவங்களில் படுவதனால் குருடாதல், செவிடாதல், அவயவ இழப்பு, இறப்பு நிகழ்வதுடன் சுவாசம் தொடர்பான நோய்கள், இதய நோய்கள், தோல் நோய்கள், மாரடைப்பு போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கின்றது. உளவியல் தாக்கம் எனும் போது நேரகாலமில்லாமல் காணுமிடமெங்கிலும் வெடி வெடிப்பதனால் அனைத்து உயிரினங்களினதும் தூங்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி , பயம் போன்ற மனத்தாக்கத்துடனான உணர்வுகள் மேலோங்குவதனால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகள், பறவைகள், விலங்குகள், நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் இறப்பும் நிகழ்ந்தமையினையும் அறிய முடிகின்றது.

எது எவ்வாறாயினும் பட்டாசு வெடித்தலானது ஒரு சிலருக்கு குறுகிய நேர மகிழ்ச்சியினையும் குதூகலத்தினையும் இளம் தலைமுறையினருக்கு வழங்கினாலும் பலருக்கு அது அவர்களது வாழ்க்கையினை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கு இடையூறாகவே காணப்படுகின்றது. இன்று இளம் தலைமுறையில் இருப்பவர்கள் தாமும் இன்னும் சொற்ப காலத்தில் முதுமையை அடைந்து அக் கஸ்டத்தை அனுபவிக்கப் போகின்றோம் என்பதனை மறந்து விடுகின்றனர். அதற்காக பட்டாசே வெடிக்கக் கூடாது எனக் கூறவில்லை எதைச் செய்தாலும் அளவோடு செய்ய வேண்டும் எனக் கூறும் போது “ அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது.

எனவே வீதியோரங்களிலும், உயிரின வாழிடங்களிலும் பட்டாசினைக் கொளுத்தாமலும், ஏனைய உயிரினங்களின் அமைதியினைக் குலைக்காமலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெடி கொளுத்துவதைத் தவிர்த்தும் அளவோடு பட்டாசினை வெடித்து மனிதர்கள் மட்டும் அமைதியான வாழ்க்கையை வாழாது உலகிலே வாழும் அனைத்து உயிரினங்கள் மற்றும் சூழலின் சமநிலையினைப் பேணவேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

வரையறுக்கப்பட்ட குறுகிய வாழ்க்கையிலே “வாழ்க்கை என்பது வாழ்வதற்கே” என்பதனைக் கருத்தில் கொண்டும் “சுதந்திரம் என்பது எமக்கு முன்னால் உள்ளவரின் மூக்குநுனி வரையுமே” எனும் கோட்பாட்டினைப் பின்பற்றுவதுடன் மானிடாதிக்கத்தின் போக்கினைக் குறைத்து சூழலுக்குக் கட்டுப்பட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவதுடன், ஒவ்வொருவரும் தத்தமது கலாசாரம் பண்பாடு மற்றும் விழுமியங்களை பேணிப் பாதுகாத்து அச் சொத்துக்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவோமாக.

சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …