மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி, அதன் பலன்களைக் கூடிய விரைவில் வழங்க வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இதன்படி, பணிகள் நிறைவடைந்த வீடுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களை அரசியல் அதிகாரத்துடன் தொடர்புப்படுத்தாது, அரச அதிகாரிகள் மட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி பெருந்தோட்டப் பகுதிகளுக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டின் ஊடாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் வீடுகள் தொடர்பான முறையான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மலையக மக்களின் வீடுகள், காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முறையான தரவுத் தொகுதியொன்றை முதன் முறையாகப் பராமரிக்க எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் அதிகாரிகள் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன், பெருந்தோட்ட மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மதிய உணவுத் திட்டங்களில் நிலவும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மலையக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான விடயங்களில் அரச தோட்ட நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.