இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழருக்குத் தீர்வு ’13 +’ தான்! தராவிட்டால் இந்தியாவே கதி!!

- மங்கள முன்னெச்சரிக்கை

“இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ராஜபக்ச அரசு அமுல்படுத்தாதுவிட்டால் தமிழ் மக்கள் தீர்வு வேண்டி இந்தியாவை நாடுவதை எவருமே தடுக்க முடியாது.”

– இவ்வாறு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்ற கருத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றார். 13ஆவது திருத்தத்தில் உள்ள சில ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவே முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றார். ஆனால், அவரது சகோதரரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச 13ஆவது திருத்தம் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஊடகங்களின் தலைமை செய்திப் பொறுப்பாளர்களை – பத்திரிகை ஆசிரியர்களை கடந்த வாரம் அலரி மாளிகையில் சந்தித்திருந்தபோதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதில் அரசு நாடாகமாடத் தொடங்கியுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் உண்மையில் முரண்பாடு நிலவுகின்றதா? அல்லது அவர்களுக்கு அரசியல் தெரியவில்லையா? அல்லது இந்தியாவும் தமிழ் மக்களும் முட்டாள்கள் என்ற நினைப்பில் அவர்கள் கருத்துக்களை வெளியிடுகின்றார்களா? என்று பல கோணங்களில் கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ராஜபக்ச சகோதரர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மிகவும் அவசியம் என்று இந்தியாவில் அவர் முன்னிலையில் வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்குத் தலையாட்டும் வகையில் பாசாங்கு செய்த ஜனாதிபதி கோட்டாபய, இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவதற்கிடையில் அங்கு வைத்தே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூறியிருந்தார்.

ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தன்னைச் சந்தித்த உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்களிடமும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

ஒரே அரசின் முக்கியஸ்தர்களான தம்பியும் அண்ணனும் இப்படி ஏன் மாறுபட்ட விதத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் உண்மை முகத்தைக் காட்ட வேண்டும். இந்தியாவையும் தமிழ் மக்களையும் குழப்பும் வகையில் கோட்டாபயவும் மஹிந்தவும் கருத்துக்களை வெளியிட்டால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக – அவமானமாக அமையும்” – என்றார்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close