Breaking News
அமெரிக்காவில்

அமெரிக்காவில் கொரோனாவால் பலி 17 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் பலி 17 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ், உலகின் பிற நாடுகளை விட வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இதனால் அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் பேரழிவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் என்று பார்த்தால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கி செல்கிறது.

22 கோடி மக்கள் தொகையில் 97 சதவீத மக்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடந்தாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய், அமெரிக்கர்களை விடாமல் துரத்திக் கொண்டே செல்கிறது.

இந்த கொடிய வைரசால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலியானவர்களின் எண்ணிக்கையும், 17 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் ஒப்பிடுகிறபோது, மொத்தம் பாதிக்கப்பட் டுள்ளவர்களில் 30 சதவீதம்பேர் அமெரிக்கர்கள்தான். பலியிலும் அமெரிக்காவின் பங்களிப்பு 17 சதவீதமாக இருக்கிறது.

அமெரிக்க நாட்டில் 1 கோடியே 60 லட்சம் பேர் 3 வாரங்களில் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். உலகின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய நியூயார்க் நகரில் ஒரு நாளில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது.

அங்கு இந்த வைரஸ் உச்சகட்ட அளவை எட்டியுள்ளதாக மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குமோ கூறினார். இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு வருகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட கண்டிப்பான விதிமுறைகள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலில், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது; இதனால் கணிக்கப்பட்டதை விட உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரம் அளவுக்கு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இந்த வாரம் ஒரு மோசமான வாரம் ஆகும். உண்மையில் ஒவ்வொரு நாளும் இறப்பின் அளவு அதிகரித்து வருவதாக தெரிகிறது” என்று கூறினார்.

“நியூயார்க்கில் ஒரே நாளில் முதல்முறையாக 820 பேர் இறந்துள்ளனர்” என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி பாசி குறிப்பிட்டார்.

இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறபோதும், ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். வேலை இல்லாமல் இருப்போர், அரசிடம் நிவாரணம் கேட்டு விண்ணப்பிப்பது அதிகரித்து வருவதால், அது அமெரிக்க பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அங்கு வேலையில்லாதோருக்கான நிவாரண உதவியாக 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.148 லட்சம் கோடி) அறிவித்து செயல்படுத்தியது போதவில்லை என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. ஆனால் வரும் மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு எழுச்சி நிலைக்கு வந்து விடும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறுகையில், “அமெரிக்க பொருளாதாரம் மிக சிறப்பாக செயல்படப் போகிறது. நமது பொருளாதார மந்த நிலை முடிவுக்கு வந்துவிடும். ஊக்கம் அளிக்கக்கூடிய பல திட்டங்கள் எங்கள் வசம் இருக்கின்றன. அவை நாட்டை எழுச்சி பெற வைக்கும்” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா தகவல் மையம், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1904 என கூறுகிறது.

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …