Breaking News
சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை

சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை – சட்டமசோதா நிறைவேற்றம்

12 வயதுகுட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என்ற சட்டமசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுமிகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெருகி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

இதனையடுத்து அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, நேற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால், 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்புணர்வு வழக்குகளை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்களை, 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில்,குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடிவு செய்யும் முன்பு, அரசு வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி பிரதிநிதியின் கருத்தை கேட்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …