Thursday , December 13 2018
Home / Headlines News / கறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை

கறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)! தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை

ஈழத்தமிழர்களின் வரலாற்றில்… 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து… தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் “கருப்பு ஜூலை’ என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர்.

அந்த “கருப்பு ஜூலை’ நிகழ்ந்து தற்போது 35வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை.

அன்று என்ன நடந்தது?

எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 1983 ஜூலை 23 அன்றுதான் உணர்ந்தது. பெரிய அளவில், இராணுவ வீரர்களின் மீது அன்றுதான் கொரில்லாத் தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவத்தொடர் வண்டிகளில் வந்துகொண்டிருந்த, சிங்கள இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த நாளிலிருந்து இராணுவத்தின் வெறியாட்டம் தொடங்கிவிட்டது. தமிழர்களின் வீடுகள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தமிழர்கள் பலர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். நுவரேலியாவில், அன்று அமைச்சராக இருந்த காமினி திசநாயக, தானே முன்னின்று கலவரங்களை நடத்தினார். சிங்களக் காடையர்களும் இராணுவமும் சேர்ந்து நின்று, தமிழின அழிப்பு வேலையைத் தொடங்கி வைத்தனர். காலையில் தொடங்கிய கலவரம், நடுப்பகலுக்குள் உச்சத்தை எட்டியது. நுவரேலியா நகரமே அக்கினிக் கடலாகக் காட்சியளித்துள்ளது. ஒரு சிறுமி உட்பட பதின்மூன்று பேர் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரேலியாவில் இப்படி ஒரு நிலைமை என்றால், தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்ட வடக்கு, கிழக்குப் பகுதிவாழ் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

1983 ஜூலை கலவரம், உலகம் காணாத இரண்டு கொடூரங்களைக் கொண்டிருந்தது.

1. வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டி மணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழ்க்கைதிகள் கொல்லப் பட்ட விதம்.

2. நடைபெற்ற படுகொலைகள் குறித்து, அன்று அதிபராக இருந்த ஜெயவர்த்தனே வெளியிட்ட கருத்து.

வெலிக்கடைச் சிறையில் இருந்த சிங்களக் காடையர்கள் பலருக்கு 1983 ஜூலை 25ம் நாள், இரும்புத் தடி, உருட்டுக்கட்டை, கத்தி போன்ற கொடிய ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி ஒன்றே ஒன்றுதான். சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளை அடித்து நொறுக்கி கொலைசெய்ய வேண்டும் என்பதே அந்தப் பணி. அதனை அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே செய்து முடித்தனர். அச்சத்தில் உறைந்து போய், ஒருமூலையில் ஒடுங்கிக் கிடந்த மயில்வாகனன் என்னும் 19 வயது இளைஞனை வெளியே இழுத்து வந்து அடித்து அடித்தே கொன்றனர்.

வெறுமனே கொலை செய்வது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி ஒருவனைக் கொல்வது என்பதே அன்று நிகழ்ந்த கொடூரம். அன்று சிறையிலிருந்த மாவீரன் குட்டிமணி, நீதிமன்றத்தில் ஒருமுறை “”நான் இறந்த பிறகு என் கண்களை இரண்டு தமிழர்களுக்குப் பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழ் ஈழத்தை என் கண்கள் காணட்டும்” என்று கூறினார்.

அதற்காக அந்த “மாபெரும் தேசத்துரோகக் குற்றத்திற்காக’ குட்டிமணியின் கண்கள் இரண்டையும் தோண்டி கீழேபோட்டுக் காலில் மிதித்தனர். கண்களிலிருந்து ரத்தம் கொட்டும் காட்சியைக் கண்டு ரசித்தனர். துடிக்கத் துடிக்கக் குட்டிமணியைக் கொன்று தீர்த்தனர்.

இப்படி அந்தச்சிறை முழுவதும் 35 பிணங்கள் சிதறிக் கிடந்தன. அத்தனை கொடுமைகளுக்கும் பின்பு, அன்று நாட்டின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அளித்த பேட்டியின் சில வரிகள் கீழே உள்ளன.

“இப்போது யாழ்ப்பாணத்தவர்களின் எத்தகைய அபிப்பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவர்களைப் பற்றி இப்போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலையில்லை.”

தன் சொந்தநாட்டு மக்களை பற்றி, அவர்கள் கொல்லப்படுவதைப் பற்றி, ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றி அந்த நாட்டின் அதிபர் கவலைப்படவில்லை. அனால் அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும், அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள்.

1983ல் நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் எற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறையில் சிதறி விழுந்தவை குட்டிமணியின் கண்கள் அல்ல.

35 வருடங்கள் ஓடிவிட்டன…தமிழர்கள் வாழ்வில் எத்தனை நாள்கள் கடந்து போனாலும் இந்த நாளை மறக்க முடியாது.. மறக்க கூடாது… நம் தமிழ் உறவுகளின் சுதந்திர வாழ்வை அடியோடு மாற்றிய நாள்.. அவர்களின் ஜனநாயக குரல்வளைகள் நெறிக்க பட்ட நாள்… மண்ணெங்கும் தமிழ் ரத்தம் சிதறி ஓடிய அதிபயங்கர தினம் அது..

ஜூலை 23 ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்…

சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள்…
மறைந்த நம் உறவுகளை வணங்கி… கூடிய விரைவில் தேசிய தலைவரின் தலைமையில் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிப்போம்….

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …