Breaking News
கேரளாவை உலுக்கும் மழை

கேரளாவை உலுக்கும் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

கடவுளின் தேசம் எனவும், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாகவும் அறியப்பட்டு வந்த கேரளாவுக்கு, தற்போது இயற்கை பெரும் சோதனையை பரிசளித்துள்ளது.

ஆம். கடந்த ஒரு மாதகாலமாக, இடைவெளி இன்றி கொட்டி தீர்க்கும் கனமழையால், கேரளா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், திரிசூர், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கன்னுர், வயநாடு உள்பட கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன.

சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்புகளும் நாசமாகி வருகின்றன.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் ரயில் போக்குவரத்து, சாலைவழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொச்சி, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்கள்கூட, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியுள்ளன.

இதுவரை அம்மாநிலத்தில் 3,700 டிரான்ஸ்ஃபார்மர்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக, கேரள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பத்தனம்திட்டா, சபரிமலை, சாலக்குடி, திரிசூர், கொச்சி உள்ளிட்ட இடங்களில், முக்கிய சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறியுள்ளன.

கனமழை ஒருபுறம், சுழற்றியடிக்கும் சூறைக்காற்று ஒருபுறம், சாலைகளையும், வீடுகளையும் மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம் ஒருபுறம் என, கேரள மக்கள் பெரும் தத்தளிப்பில் சிக்கியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்புப் படையினர் உதவியுடன், தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

என்றாலும், பல இடங்களில், வெள்ள நீர் காட்டாற்று வெள்ளம் போல ஓடுவதால், மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

கேரள கனமழை

தற்போதைய நிலையில், 14 மாவட்டங்களுக்கு, ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

அதுபோல, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றும் அளவில் முக்கிய திருத்தம் செய்யும்படி, தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் பினராயிவிஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

தென்னிந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகங்கள் சார்பாக, கேரளாவில் மேற்கொள்ளப்படும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (ஆகஸ்ட் 16) நிலவரப்படி, மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

மழை, வெள்ளம் காரணமாக, கேரளாவின் முதன்மை பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …