Breaking News

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகின்றன.

டெல்லியில் நேற்றுமுன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள் போர்க்களங்கள் போல காணப்பட்டன.

ஒருவரை ஒருவர் கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்கினர். டயர்களை கொளுத்திப் போட்டனர். கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 48 போலீசாரும், பொது மக்களில் 98 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டெல்லி வந்த நிலையில், தலைநகரில் வன்முறை தலைவிரித்தாடியதால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன்கீழ் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45 இடங்களில் தீ வைப்பு சம்பவங்களில் தீயை அணைக்க வருமாறு அழைப்புகள் வந்ததாகவும், தீயைணப்பு வாகனம் ஒன்றின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், மற்றொரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

தடை உத்தரவுக்கு பணியாமல் நேற்றும் கிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கற்களை வீசித் தாக்கினர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. தெருக்களிலும், சாலைகளிலும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால் பல இடங்களில் புகை மண்டலங்கள் உருவாயின.

மவுஜ்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், “கடந்த 35 ஆண்டுகளில் இப்படி ஒரு வன்முறையை நான் பார்த்தது இல்லை” என கூறினார்.

இந்த வன்முறையில் நேற்று மட்டும் 6 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 13 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சந்த்பாக் பகுதியில் நேற்று மாலை மீண்டும் வன்முறை வெடித்தது. ஒரு கும்பல் பல்வேறு கடைகளுக்கு தீவைத்தது. இதில் ஒரு பேக்கரி, ஏராளமான பழ வண்டிகள் எரிந்து நாசமாயின.

போலீசார் மீது கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. வன்முறை கும்பலில் சிலர் பெட்ரோல் குண்டுகள் வைத்திருந்ததாகவும் தெரிகிறது. போலீஸ் படையினர் வன்முறை கும்பலை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை.

இதனால் கூடுதல் போலீசாரும், துணை ராணுவத்தினர் ஆயிரம் பேரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த கும்பலை விரட்டியடித்தனர். பாதுகாப்பு, ரோந்து பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், அரியானா மாநில எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

உள்துறை மந்திரி அமித்ஷா உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் துணை நிலை கவர்னர் அனல் பைஜால், முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைதி காக்க வேண்டும், வதந்திகளை பரப்பக்கூடாது என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் அமைதி குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வன்முறை பாதித்த பகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து தகுந்த உத்தரவு வராததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என புகார்கள் வருகின்றன. இதுபற்றி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் விவாதிப்பேன்” என கூறினார்.

“வெளியிடங்களில் இருந்து வந்து இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை தடுக் கிற வகையில் எல்லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக மூடப்பட்டிருந்தன.

டெல்லி வடகிழக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இன்று (புதன்கிழமை) நடைபெற இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது. வடகிழக்கு பகுதியில் மொத்தம் 86 தேர்வு மையங்கள் உள்ளன.

இதுதவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல தேர்வுகள் நடைபெறும் என்றும், வடகிழக்கு பகுதியில் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள அமுல்யா பட்நாயக்கின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. இதைத்தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பதவிக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Today rasi palan 26.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 26 பெப்ரவரி 2020 புதன்கிழமை

போராட்டத்தால் போர்க்களமானது டெல்லி: 5 பேர் பலியால் பதட்டம்

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

About அருள்

Check Also

Today rasi palan – 29.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 29, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)   இன்றைய …