இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

அதிகாரப் பகிர்வால்தான் அபிவிருத்தி சாத்தியம்!

- சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிந்தித்துச் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நாட்டின் அபிவிருத்தி சாத்தியம் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அபிவிருத்தியில் தமிழ் மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாதுபோயுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை ஜனாதிபதியால் வெற்றிக்கொள்ள முடியும்.

அதிகாரப் பரவலாக்கல் ஊடாகத் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஓர் அரசியல்வாதி அல்லர். அதனால் அவர் மனதில் பட்டவற்றை வெளிப்படையாக – உண்மையாகப் பேசுகின்றார். அவர் சரியானதைச் செய்வார் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அரசமைப்பு உருவாக்கதினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கான தீர்வை எட்டமுடியவில்லை. எனவே, புதிய அரசு தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வு ஒன்றை வழங்குவது கட்டாயமாகும்.

எமது நாடு பாரிய கடன் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து வருகின்றது. 30 வருடங்கள் போர் ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அரசியல் தலைமைகள் இதனை விரும்பாத போதிலும் போர் இடம்பெற்றது. போர் இல்லாது போயிருந்தால் கடன் நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

கடந்த அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றஞ் சுமத்திக்கொண்டிருந்தார்கள். சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், சிங்கள, பெளத்த மக்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள் என்பதை நிராகரிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசாரம், சமூகக் கட்டமைப்பை மதிக்க வேண்டும். நீண்டகாலமாக இந்தக் கட்டமைப்பு காணப்படுகின்றது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. முரண்படுவதற்காக நான் இதனைச் சொல்லவும் இல்லை. அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எமக்கு உள்ளது.

அரசமைப்பு மிகவும் முக்கியமான சட்டமாகக் கருதப்படுகின்றது. அரசமைப்பு நகர்வுகளில் ஏனைய நாடுகளில் அனைத்து மக்களின் கருத்துக்கள், கொள்கைகள், உரிமைகள் என அனைத்தையும் உள்ளடக்கி அனைவரும் ஓர் இனம் என்ற அடிப்படையில் அரசமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கூறும் புதிய அரசமைப்பும் இந்த முறையில் அமைய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் பல நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சர்வகட்சிக் கூட்டத்தில் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.

புதிய அரசு மஹிந்த ராஜபக்சவின் சகோதரரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவும் பிரதமராக உள்ளார். எனவே, இவர்கள் சேர்ந்து தீர்வு ஒன்றை வழங்க முன்வர வேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் சர்வதேத்தின் பங்களிப்பு – முக்கியத்துவம் அவசியமானது. இந்தியாவும் சர்வதேசமும் இந்த நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவர அதிக ஆர்வம் காட்டின. இதில் ஜனாதிபதியினதும் தற்போதைய பிரதமரினதும் பங்களிப்பு இருந்தது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியம். அபிவிருத்தியில் தமிழ் மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவிக்கின்றேன்.

நாட்டின் அபிவிருத்திக்காக தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள்” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close