Breaking News
கலைஞர் கருணாநிதிக்கு

அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்

திராவிடம் எனும் உடலில் சமூக நீதிக் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் சுமந்த காவியத் தலைவன்..

அரசியல் மற்றும் இலக்கிய அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர்.

பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயருக்கு சொந்தக்காரர்.

வள்ளுவன், பெரியார், அண்ணா என மூவரும் ஓர் உருவாய் வலம் வந்த திமுக எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல், கலைஞர் மு கருணாநிதி.

ஆம்!! “கருணாநிதி” இந்த பெயர் கடந்த 60 ஆண்டுகால அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இத்தனை ஆண்டுகால அரசியலை தன்னையே மையப்படுத்தித் சுழல வைத்த தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்..

அரசியல் களத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர். எழுத்தை காதலியாக நேசித்த அவர், தனது பள்ளிப் பருவம் முதலே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

சிவாஜி, எம்ஜிஆர் என அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன என்றால் அது மிகையாகாது.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை எனும் கிராமத்தில் கடந்த 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.

இளம் வயது முதலே போராட்டக் குணத்துக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் முதல் போராட்டம், அவரது ஆசிரியரை எதிர்த்து தான். 1936-ஆம் ஆண்டில் திருவாரூர் உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி

இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமின்றி, அவ்வாறு குதிக்கவும் முனைந்தார். பள்ளியில் பயில இடம் கொடுக்கப்பட்டது. கருணாநிதியின் முதல் போராட்டத்தின் வெற்றி அது.

அடுத்ததாக அவர் கண்ட மாபெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார் கருணாநிதி. இதுவே கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த திமுக, 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. நாகப்பட்டினத்தை விரும்பிய கருணாநிதியைக் குளித்தலைக்கு அனுப்பினார் அண்ணா.

அந்தத் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர். தொடர்ந்து, 1962 தேர்தலின்போது கடந்தமுறை வென்ற 15 பேரையும் தோற்கடிக்க வியூகம் வகுத்தார் காமராஜர்.

அதில் 14 பேர் தோற்றுப் போயினர், தஞ்சாவூரில் போட்டியிட்ட கருணாநிதியைத் தவிர. அன்று தொடங்கி இன்று வரை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிச் சரித்திரம் படைத்த நாட்டின் மூத்த அரசியல்வாதி கருணாநிதி.

1967 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது கருணாநிதியைப் பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார் அண்ணா. திடீரென அண்ணா அகாலமரணம் அடைந்தபோது அவருக்குப் பதிலாக கருணாநிதி முதல்வரானார். சாதிய சமூகத்தில் பெரியார் பேசிய சமூக மாற்றங்களை அரசியல் தளத்தில் செயலாக்கி, இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்திருத்த சட்டங்களை இயற்றியவர் கருணாநிதி.

இந்திய அரசியல் களத்தில் கருணாநிதி அளவுக்கு விமர்சிக்கப்பட்டவர்களும் அதே அளவுக்கு அரசியலில் புகழப்பட்டவர்களும் யாருமே இல்லை. ஒரு தனிநபரை எதிர்த்து பல கட்சிகள் உருவானதும் கருணாநிதிக்கு தான் நடந்திருக்கிறது. ஈ.வி.கே சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ, விஜயகாந் என இந்த பட்டியல் நீள்கிறது. அரைநூற்றாண்டு கால தமிழக அரசியல், கருணாநிதி ஆதரவு – கருணாநிதி எதிர் என்றே இருந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு

நாட்டின் பல பிரதமர்கள், பல முதல்வர் என பரபரப்பாக அரசியல் களத்தில் சாணக்கியனாக இயங்கியதுடன், இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி என சூறாவளியாக சுழன்று வந்த ஓய்வறியா திராவிட சூரியன் கருணாநிதி, அண்மை காலமாக வயது முதிர்வினால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில் இருந்து விலகி தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும், அவ்வப்போது மருத்துவமனை சென்று அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவரது உடல் திடீரென நலிவுற்றது. மண்ணுலகை ஆண்டது போதும், விண்ணுலகம் வா…!! என இயற்கை அவரை கொண்டு செல்ல முற்பட்டது.

விண்ணுலகை ஆளத் தான் என்றாலும் தன் மூச்சான தமிழையும், தமிழ் மக்களையும் எவ்வாறு விட்டுச் செல்வார் கருணாநிதி..இயற்கை மன்றாடியது. பிறக்கும் போதே போராட்டக் குணத்துடன் பிறந்த கருணாநிதியை எளிதில் கொண்டு சென்று விட முடியுமா என்ன? இயற்கை போராடியது…போராடியது…போராடியது….பெரும் போராட்டத்துக்கு பின்னர், மன்றாடிக் கூட்டிச் சென்றது வா…அங்கும் ஓர் போராட்டக் களம் இருக்கிறது என்று…!!!அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்..!!விண்ணில் உதிக்க!!!!

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …