Breaking News

கோட்டாபய கொலை முயற்சி வழக்கில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது அவரைக் கொலைசெய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 13 வருடங்களாகத் தடுப்புக் காவலில் இருந்த யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த சந்திரபோஸ் செல்வச்சந்திரனை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

அவரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்தே வழக்கின் நான்காம் எதிரியான சந்திரபோஸ் செல்வரச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கோட்டாபய ராஜபக்சவின் வாகன அணி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் காயமடைந்தனர். அரச சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொலை, கொலை முயற்சி, அவற்றுக்கான சதித் திட்டம் தீட்டியமை, அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஐந்து தமிழ்க் கைதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2013 டிசெம்பர் 4ஆம் திகதி சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டன.

தடுப்புக் காவலில் முதலாம், இரண்டாம், ஐந்தாம் எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்தவர்கள் என்று கூறப்படும் பொலிஸ் அத்தியட்சகர்கள் நீதிமன்ற விசாரணைக்கு சமுகமளிக்காத நிலையில் நான்காம் எதிரியான சந்திரபோஸ் செல்வச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.

அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, புற்றுநோய்ச் சிகிச்சைக்காகக் கொழும்புக்கு வந்த தனது கட்சிக்காரரைப் பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்து சித்திரவதை செய்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தயாரித்து பலவந்தமாக அதில் ஒப்பத்தைப் பெற்றுள்ளனர் என்று வாதிட்டார்.

எதிரியின் சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயூரதன், தடுப்புக்காவலில் எதிரி சித்திரவதை செய்யப்பட்டமையால் அவரது உடலில் பன்னிரண்டு கடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளார் என்பதை சட்டத்தரணி தவராசா தமது வாதத்தில் நிரூபித்தார்.

அதனடிப்படையில் அந்த வாக்குமூலத்தை எதிரிக்கு எதிரான ஒன்றாக முன்வைப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்ட நீதிமன்றம் அந்த வாக்குமூலத்தையும் நிராகரித்தது.

அதன் பின்னர் நான்கு மாதங்கள் கடந்தும் இவ்வழக்கில் எதிரிக்கு எதிராக வேறு எந்தச் சாட்சியங்களோ, ஆதாரங்களோ, சான்றுகளோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் அவரைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது சட்டத்தவறு என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வாதிட்டார்.

அதனை ஏற்றுக்கொண்டு எதிரியை உடனடியாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரோகாந்த அபேசூரியவும், நான்காம் எதிரி சார்பில் செல்வி தர்மஜா தர்மராஜாவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் ஆஜரானார்கள்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …