Sunday , December 16 2018
Home / Headlines News / சோறு போடுவான் சொந்த மகன்

சோறு போடுவான் சொந்த மகன்

*** சோறு போடுவான்
சொந்த மகன்***

நாளுக்கு ஒருமுறை..
என் குடிசையில் அடுப்பெரியும்…
ஆளுக்கு ஒன்றென
ரொட்டித்தட்டு சுட்டுத் தரும்….

எஜமானர் வீட்டு இட்டலியை-என்
ஏழை மகன் உண்டதில்லை…
உண்டு பழகினால் – அவன்
மீண்டும் அதனை
ஆசைப்பட்டுக் கேட்கக் கூடும்…!!

தூரத்தில் எங்கேனும்
திருவிழாச் சத்தம் கேட்டால்…
நேரத்திற்கு என் மகனை
நித்திரை கொள்ளச் செய்வேன்….
திருவிழாக் கார் ஓட்டுவதற்கு
அவனுக்கும் ஆசை இருக்கும்..

ஓட்டை வேட்டியை
ஒன்றுக்கு ஒன்பதாய்
மடித்துக் கட்டினாற் போல…
ஓலையில் என் மாளிகை…..

வெயில் என்றால் வேர்வையும்
மழை வந்தால் நடுக்கமும்
என்றுமே எம்முடன்
கூடக் குடியிருக்கும்….

வேலை என்று நான் போக
ஏழைக் கைக்கூலி என்பர்…
கூழைக் குடித்துத்தான்…பெரும்பாலும்
குடும்ப வண்டி ஓட்டியிருக்கிறேன்….

காற்றுக்கு என் குடிசை
கரகாட்டக் கூத்தாடும்…
சோற்றுக்கு சொதியுடன்…
சுரைக்காய் கறி இருக்கும்…..!!

பீத்தல் காற்சட்டையில்
பின் இரண்டு ஊசி குற்றி
மூத்த மகன் முழு நாளும்
பள்ளிக்கூடம் போய் வருவான்…

நகை ஏதும் அடகு வைத்து
சிகை அலங்காரம் செய்து வைத்தால்.. – என்
சின்னப் பையனும்
சிட்டுக்குருவி போல அழகாவான்…
ஆனால் என் கையில் இருப்பது
விரல்களும் நகமும் தான்…

மழையின் தூவானத்திற்கும்
வெயிலின் புழுக்கத்திற்கும்
அங்குமிங்குமாய்..
அடிக்கடி உருக்குலைவோம்…

அறுந்த செருப்புக்கு
ஆணி குத்தி மாட்டும் எங்களுக்கு
மருந்து மாத்திரை என்பது
மறைக்கப்பட்ட மறு பக்கங்களாகும்.

என் முகம் பார்க்கக் கூட – வீட்டில்
கண்ணாடி இல்லை…
ஒன்றென்றால் உதவி செய்ய
முன்னாடி எவரும் இல்லை….

கறைகள் கழுவிய சூரியனாய்
முறைகள் பழகிய முழு நிலவாய்
வறியவன் ஆயினும்
நெறிமுறை அறிந்தவனாய்….
நான் என் பிள்ளையை வளர்ப்பேன்
நாளைக்கு
“அவன் எனக்கு சோறு போடுவான்”

***சூ.ஜெயகிருஸ்ணா***

Check Also

ரணில்

சுபவேளையில் இன்று பிரதமராகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16 மணியான சுபவேளையில் பிரதமராகப் பதவியேற்பார் எனக் …