Thursday , November 15 2018
Home / Headlines News / கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி
கிழக்கில்

கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இதனையடுத்து காவேரி மருத்துவமனையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம், சிஐடி காலணியில் வைக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டது.

அங்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என பல அரசியல் கட்சி தலைவர்கள், அண்டை மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள், இலக்கியவாதிகள் மற்றும் கோடிக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, சட்ட சிக்கலை காரணம் காட்டி கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மு.க.ஸ்டாலின் உட்பட பலரையும் நெகிழ செய்தது.

இதனையடுத்து, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அண்ணா நினைவிடத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

கோடிக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் கதறி அழுதபடி இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

திமுக தலைவரின் புகழுடல் அண்ணா சமாதியை அடைந்ததும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் நீண்ட கால நண்பருமான பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு முப்படையினர் அணிவகுத்து கருணாநிதி மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை எடுத்து மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். பின்னர், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழைக்குள் அவரது உடல் வைக்கப்பட்டது.

அதையடுத்து, முப்படை தளபதிகளின் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழை மூடப்பட்டது.

தொடர்ந்து அப்பேழையில் ஆணி அறையப்பட்டு, காலம் முழுவதும் அவர் நெஞ்சில் சுமந்த அண்ணாவின் சமாதிக்கு பின்புறம் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த குழிக்குள் இறக்கப்பட்டு, சுமார் மாலை 7 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Check Also

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com