Saturday , November 17 2018
Home / Headlines News / பாபா ராம்தேவைத் தொடர்ந்து, ஜக்கி வாசுதேவும் ‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு’: ‘பொருளாதார தற்கொலை’ என கருத்து

பாபா ராம்தேவைத் தொடர்ந்து, ஜக்கி வாசுதேவும் ‘ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு’: ‘பொருளாதார தற்கொலை’ என கருத்து

யோகா குரு பாபாராம்தேவ் கூறிய கருத்தைத் தொடர்ந்து, ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கிவாசுதேவும், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

100 நாட்கள் போராட்டம்
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

13 உயிர்கள், ஆலை மூடல்
100-வது நாளின்போது மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனுக்கொடுக்கச் சென்றபோது போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் தடியடிநடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பானதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

பாபாராம் தேவ் ஆதரவு

இந்நிலையில், சமீபத்தில் லண்டன் சென்றிருந்த யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவரின் மனைவியையும் சந்தித்துப் பேசினார். அதன்பின் பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் செயல்படும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்காக அப்பாவி மக்களைப் பயன்படுத்தி, சில சர்வதேச சதிகாரர்கள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள்தான் கோயில்கள். அவை ஒருபோதும் மூடக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

ஜக்கி வாசுதேவ் ஆதரவு

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை ஜக்கி வாசுதேவ் அளித்த பேட்டியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

‘‘அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஒரு தொழிற்சாலை இப்போது மூடப்பட்டுவிட்டது. இது சரியானதல்ல. இனிமேல், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து, அந்த விதிகளுக்கு அந்தத் தொழிற்சாலையை உட்படுத்த வேண்டும். அதற்கான வழிகள் இருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். இதுபோன்ற தொழில்களை நீங்கள் மூடிவிட்டால், இந்த நாட்டை எங்கே நீங்கள் அழைத்துச்செல்கிறீர்கள்’’ என்று பேசி இருந்தார்.

பொருளாதார தற்கொலை

இந்த கருத்துக்குபல்வேறு தரப்பில் இருந்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு எதிர்வினைகள் வந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை மீண்டும் ட்விட் செய்தார். அதில் அவர் கூறுகையில், ‘‘நான் தாமிரம் உருக்கும் தொழிலில் நான் வல்லுநர் இல்லை.ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், நாம் சீனா போன்ற வெளிநாடுகளில்இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். சுற்றுச்சுழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார கண்ணோட்டமா?

ஸ்டெர்லைட் ஆலையால், சமூகத்துக்கு எப்படிப்பட்ட கேடுவிளைகிறது, உடல்நலத்துக்கு கேடுவிளைகிறது என்பதை உணர்ந்துதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.அந்தப் போராட்டத்தின் விளைவாக 13 பேர் போலீஸார் துப்பாக்கி சூட்டுக்குப் பலியானார்கள். ஆனால்,13 உயிர்கள் இழந்திருப்பதைக் கருத்தில் கொள்ளாமல் வெறும் பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டுமே ஜக்கிவாசுதேவின் கருத்து அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அடித்துக்கொல்லுதல், பொருளாதார தற்கொலை என்ற தடித்த வார்த்தைகள் மனித உயிர்களைக் காட்டிலும் ஸ்டெர்லைட் ஆலையின் முக்கியத்துவம் அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விதிமுறை மீறல்கள்

கோவை மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஈஷா அறக்கட்டளை செய்துவரும் பல்வேறு விதிமுறை மறீல்களை அங்குள்ள பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது மக்களுக்குத் தெரிவித்து வருகின்றன, அரசிடம் இருந்தும் பல்வேறுநோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டுமானத்தைக் கட்டியிருப்பதாகக்கூறி வெள்ளியிங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு அமைப்பு புகார் தெரிவித்து அந்த கட்டிடங்களைஇடிக்க வலியுறுத்தியது.

யானைகள் நடமாடும், வாழும் பகுதி எனச் சொல்லப்படும் மேற்குதொடர்ச்சி மலையில் எலிபெண்ட் காரிடர் பகுதியில் ஈஷா அறக்கட்டளை பல்வேறு கட்டிடங்களைக் கட்டிவருவதாக விலங்குகள் நலவாரியத்தினர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதுபோன்றஎந்த விதிமுறை மீறல்களில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

அதிமுகவிற்கு சவால்விட்ட ரஜினிகாந்த!! எதற்காக தெரியுமா?

சென்னை வெள்ளத்தின் போது அதிமுகவினர் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியது போல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கஜா …