Saturday , November 17 2018
Home / Headlines News / ராமேசுவரத்தில் நீதித்துறை நடுவர் நேரில் ஆய்வு: ஆயுதங்களை அழிக்க அறிவுறுத்தல்

ராமேசுவரத்தில் நீதித்துறை நடுவர் நேரில் ஆய்வு: ஆயுதங்களை அழிக்க அறிவுறுத்தல்

ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதக் குவியல்களை நீதித்துறை நடுவர் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் வசிக்கும் எடிசன் என்பவர் தனது வீட்டின் தோட்டத்தில் பள்ளம் தோண்டியபோது அங்கு ஆயுதக் குவியல் இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் என்.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் டிஎஸ்பி மகேஷ், மாநில கியூ பிராஞ்ச் அதிகாரிகள், தேசிய உளவுத் துறை போலீஸார் ஆகியோர் மேற்பார்வையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டுகளை செயல் இழக்க வைக்கும் தனிப் படையினர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அப்பகுதியில் தொடர்ந்து தோண்டியபோது பெருமளவில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்களில் வெடிக்கும் தன்மை உள்ள ஆயுதங்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு அதே பகுதியில் மற்றொரு இடத்தில் குழி தோண்டி தண்ணீர் நிரப்பி புதைத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு யாரும் வராமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் விடியவிடிய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிக்கும் சக்தியை இழந்த ஆயுதங்கள் மட்டும் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொடர்ந்து மதுரையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் வந்து எடிசனின் வீடு மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

வேறு எங்கும் ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர். ஆயுதக் குவியல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய வசதியில்லை. இதனால் இவற்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக ராமேசுவரம் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பாலமுருகன் நேற்று மதியம் அந்தோணியார்புரத்தில் உள்ள எடிசன் வீட்டிலும், ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை ஆய்வு செய்தார்.

பின்னர், நீதித்துறை நடுவர் வழிகாட்டுதலின்படி மக்கள் நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான ராமேசுவரத்தின் கடற்கரை பகுதிகளில் ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்பணி ஓரிரு நாளில் தொடங்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

Check Also

அதிமுகவிற்கு சவால்விட்ட ரஜினிகாந்த!! எதற்காக தெரியுமா?

சென்னை வெள்ளத்தின் போது அதிமுகவினர் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியது போல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கஜா …