இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

மலையகத்தில் குளவிக்கொட்டு! ஒருவர் பலி!! 40 பேர் பாதிப்பு!!!

- இன்று மட்டும் மூன்று தோட்டங்களில் இந்தத் துயரம்

மலையகத்தில் இன்று மாத்திரம் மூன்று தோட்டங்களில் குளவிக்கொட்டு இடம்பெற்றுள்ளது. இதில் சிக்குண்டு தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 40 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

திம்புள்ள

ஹட்டன், திம்புள்ள தோட்டத்திலே குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.

பத்தனை – கெலிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஈஸ்வரன் (வயது – 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 4 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது எனப் திம்புள்ளப் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை – கெலிவத்தைத் தோட்டத்திலிருந்து, திம்புள்ளப் பகுதிக்கு வந்து தேயிலை மலையில் வேலைசெய்துகொண்டிருக்கையிலேயே – மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து இவர்களைக் கொட்டியுள்ளது.

இதையடுத்துப் பாதிக்கப்பட்டவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும், நான்கு தொழிலாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டகொடை

வட்டகொடை மேற்பிரிவு தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்துகொண்டிருந்த தொழிலாளர்களை இன்று முற்பகல் குளவிகள் கொட்டியதால் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 13 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

புஸல்லாவ

அத்துடன், புஸல்லாவையிலும் ஒரு தோட்டத்தில் குளவி கொட்டியுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close