தமிழீழ செய்திகள்முக்கிய செய்திகள்

பிரபாகரனை என் மகனில் பார்க்கிறேன்… நெகிழ்ந்து போன சீமான்..!

உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர் பிரபாகரன் என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன்.

நம் இனத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால் கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் நம் தலைவராவார்.

உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என விளிக்க ஒருபோதும் அவர் விரும்பியதுமில்லை. அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப் போராளிகளையே ‘மாவீரர்கள்’ என்றார்.

உலக வரலாற்றில் எந்நாட்டின் துணையும் இல்லாமல், எவரது உதவியும் இல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, ராணுவமாகத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியும், போர்த்திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் நமது தலைவர் மட்டும்தான்.

இந்த உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர்.
சீமான்
தன்னலம் கொண்டு, ‘தான் பெரிது தன் குடும்பம் பெரிது’ என்று தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்கள் வாழ்கிற இக்காலத்தில், தன்னைப்போலவே தன் குடும்பத்தையும் ஈக வாழ்விற்கு அர்ப்பணித்து உலக வரலாற்றில் இதுவரை தோன்றிய மற்ற தலைவர்கள் எவரைக் காட்டிலும் உயர்ந்த உன்னதத் தியாகத்தை, நினைத்துப் பார்க்க முடியா ஈகப் பெருவாழ்வைக் கொண்டவர் நம் தலைவர்.

அந்தத் தலைவனிடத்திலிருந்துதான் நான் அனைத்தையுமே பெறுகிறேன். கற்றுக்கொள்கிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர் துணைகொண்டே கடக்கிறேன்.

இந்த அரசியல் சூழல்கள் தரும் சங்கடங்களில் இருந்தும், பெரும் மன அழுத்தங்களிலிருந்தும், தீரா வேதனைகளிலிருந்தும் என்னை நானே மீட்டுக் கொள்ள என் உயிர் அண்ணன் இடத்தில் இருந்து தான் நான் வாழ்வதற்கான லட்சிய உறுதியைப் பெறுகிறேன். அவருடைய பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சீமான்

அவரது வாழ்வே இந்த உலகத்திற்கு நாங்கள் அறிவிக்கும் எமது கொள்கை சாசனமாக, எமது லட்சியப் பற்றுறுதியின் அடையாளமாக எம் முன்னால் புகழொளியோடு சுடர்விட்டு நிற்கிறது.

எனது அன்புத்தலைவன் ஆரூயிர் அண்ணன் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close