Breaking News
இந்திய உளவுத்துறையும்

இந்திய உளவுத்துறையும்… ஈழவிடுதலையும்…[பாகம் – 1]

1986இல் தமிழகத்தில் நடந்தவை என்ன?

நாம் சூரியக்குழந்தைகள்

சூரியனே
உன் கதிர்கள் நாம்.
அதனால் தான் எம்மை
ஒருவராலும் சுட்டெரிக்க
முடிவதில்லை.
நீ
வெப்பத்தின் தந்தை.
நாம்
வெப்பக் குழந்தைகள்.
அதனால் தான்
எதிர்பவர்களையெல்லாம்
எரிக்க முடிகிறது.
நீ
மறைந்தாலும் மீண்டும் மீண்டும்
உதித்துக் கொண்டிருக்கிறாய்.
அதனால் தான்
நாமும்
விழுந்தாலும் விதையாகி
முளைத்துக்
கொண்டிருக்கின்றோம்.
மாவீரரான மகத்தான
ஓவியர்கள் தீட்டிய
சிவப்புச் சித்திரங்கள்
உன் பெயரில்
ஒளிர்ந்து
கொண்டிருக்கிறோம்.
நீ
உன் கதிர்களை ஒருபோதும்
சுட்டெரிக்கப் போவதில்லை
அது போல்
உன்னைச் சுட்டெரிக்க
இன்னொரு சூரியன்
உதிக்கப் போவதில்லை

மாவீரர் மேஜர் அமுதா
நெருப்பினுள் நின்று
கவிதைத் தொகுப்பிலிருந்து

எழுத்து என்பது அதுவும் தேச விடுதலைக்கு உரம் சேர்க்கும் எழுத்து என்பது வெறும் சொற்கூட்டங்களாக அல்லாமல் மக்களின் இதயத்தை ஊடுருவித் தாக்கத்தை விளைவிக்கும் வகையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் தேசத்தின்குரல் பாலா அண்ணா என்றும் உறுதியாக இருப்பார். அதனால் எழுதும் போது கருத்துக்களைச் சுருக்கமாகவும் அதேவேசளை தெளிவாகவும் எழுதவேண்டும் என்று போதிப்பார். ஈழவிடுதலை உரிமைப் போர் வரலாற்றில் எழுத்து மூலமாகவும் ஒரு போரியலை நகர்த்தியவர் பாலா அண்ணா. அவரையும் இங்கு மனதில் நிறுத்திப் பயணிப்போம்…

உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது நாம் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்…

இவ்விடயத்தில் அதாவது திறமைபெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதில் எங்கெங்கெல்லாம் ஈழத்தமிழனம் பின்தங்கி நின்றதோ அங்கு தான் உடைப்புக்கள் எடுக்கப்பட்டன…. இதில் முக்கிய அங்கத்தை முதலில் பார்க்கப் போகிறோம்… உளவுத்துறைகளும் ஈழவிடுதலையும்… அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்… ஈழ விடுதலை முக்கிய உளவுத்துறைகளின் பிரதான ஆடுகளமாக இன்றுவரை இருக்கிறது… இவர்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன…. இருக்கின்றன… இவர்களுடைய தேசிய நலன்கள் அல்லது இலக்குகளாவது எட்டப்பட்ட்னவா? உளவுதுறைகளும் அதன் செயற்பாட்டு வடிவங்களும்… ஈழத்தமிழினம் ஒரு இனக்குழுமமாக கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்?… எனது எழுத்துக்கள் ஒரு கோர்வையில்லாமல் நகரும் என்பதையும் சொல்லிவிடுகின்றேன்…

1986இல் நடந்த ஒரு சம்பவத்துடன் இது குறித்த ஆய்வுக்குள் செல்வோம்…

புதன்கிழமை நவம்பர் 5ஆம் நாள் 1986ஆம் ஆண்டு. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுடான ஒரு சந்திப்பு இருந்தது. இதற்காக செல்வதற்கு முன் சென்னை அடையாரில் பரமேஸ்வரி நகரில் அமைந்திருந்த மாணவர் அமைப்பு அலுவலகத்திற்கு சென்று சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தேன் அலுவலப் பொறுப்பாளராக இருந்த அரசியல் போராளியுடன் சில பொலீசார் பேசிக் கொண்டிருந்தனர். அவரை உள்யே அழைத்து என்ன விடயம் எனக் கேட்டேன். அவர் இங்கு யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் எனக் கேட்கிறார்கள் என்றார்… அதற்கான விபரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக் கண்ணைச் சிமிட்டினார்.

எனது கல்லூரியான லொயாலா கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள சூலைமேடு என்ற பகுதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. அங்கு நவம்பர் 1ஆம் நாள் அவ்வமைபினால் செய்யப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இப்பகுதி மக்களில் ஒருவர் கொல்லப்பட சிலர் காயமடைந்திருந்தனர். இது ஒருவித பதட்ட சூழலை அங்கு மட்டுமன்றி சென்னை முழுமையாக ஏற்படுத்தியிருந்தது. அதற்காக அவ்வமைப்பின் இராணுவத்தளபதி டக்டஸ் தேவானந்தா உட்பட சிலர் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் அதுவும் தலைநகர் சென்னையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது கடும் கண்டனத்திற்குரியது என்பதைக் கடந்து வேண்டுமென்றே இவ்விடயம் சில தரப்பால் ஊதிப் பெருப்பிக்கப்படுவது போன்ற உணர்வும் எனக்கு இருந்தது. மாணவர் செயற்பாடுகளின் தூண்களாக இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களை இத்தகைய சூழலில் சந்திப்பதும் ஏற்பட்டுள்ள சூழலால் பங்கம் வந்துவிடாமலும் எம்மிடையேயான புரிந்துணர்வில் எவ்வித தழம்பலும் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் என்ற நிலையிலேயே ஏற்கனவே பச்சயப்பன் கல்லூரியை சந்தித்துவிட்டேன்… தற்போது சட்டக்கல்லூரி உறவுகளின் சந்திப்பிற்காக சென்று கொண்டிருக்கிறேன்…

சரி பொலிசார் என்ன கேட்கின்றனர் என செவி மடுத்தேன்… அவர்கள் அங்கு தங்கிருப்பவர்களின் பெயர்களை சொல்லுமாறு கேட்க… நம்மவரும் கந்தசாமி கங்காதரன் என்பார். குறிப்பெடுத்த அவர்கள் முகவரி என்ன என்று கேட்க நம்மவர் சொன்னார் சில்லாலை என அவர்கள் மாவட்டம் எனக்கேட்க திருகோணமலை என்றார். அடுத்து முனுசாமி முரளீதரன் தம்பலகாம் யாழ்ப்பாணம் அடுத்து சின்னத்துரை சிவகரன் கொடிகாமம் மட்டக்களப்பு எனப் பெயர்கள்; முகவரிகள் தொடர எனக்குள் சிரித்துக் கொண்டு அவர் சமாளித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நான் சட்டக்கல்லூரியை நோக்கி நகர்ந்துவிட்டேன்…

பெருமளவில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழகத்தில் கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளின் தங்கு நிiலையிலேயே எம்மிருப்பு தங்கியிருக்கிறது… நீண்ட நோக்கில் அது ஆராக்கியமானதல்ல… என்ற எனது வாதத்தை ஏற்றுக் கொண்டு மாணவர் அமைப்பு ஒன்றினூடாக் அதை முன்னெடுக்கலாம் என்ற பாலா அண்ணாவின் ஆலோசனைக்கமைய 85 மார்ச் 15இல் உத்தியோகபூர்வமாக அதைக்கப்பட்டதே மாணவர் அமைப்பு அது குறித்து பின்னர் விரிவாக வருகின்றேன்…

ஆரம்பம் முதலே மாணவர் அமைப்பில் முக்கிய அங்கமாக சட்டக்கல்லூரி மாணவர்கள் இருந்தாலும் 86 கல்வி ஆண்டில் அறிமுகமாகி தீவிர செயற்பாட்டாளராகியவரே இன்றைய விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள். அவர் அப்போது தி.மு.க மாணவரணித் தலைவராக இருந்தார். சட்டக்கல்லுரி சந்திப்பை முடித்துக் கொண்டு எனது கல்லூரி விடுதிக்கு திரும்பிய எனக்காக கத்தோலிக்க மதகுருவிற்கான கற்கைநெறியில் இருந்த சதோதரர்கள் சிலர் காத்திருந்தனர்…. முக்கியமான சந்திப்பு ஒன்றிற்கான ஏற்பாடுகளில் அவர்கள் இருந்தார்கள்… அது குறித்து இறுதி விபரங்களை பேசுவதற்காகவே காத்திருந்தனர்… லொயோலா கல்லூரி மாணவர் விடுதியில் 9 மணிக்கு மேல் ஊரடங்கு… இதில் சிலரோ விடுதி வோடன்கள் வேறு… அதனால் சந்திப்பிற்கு சங்கடமில்லையே…

இது சரி அந்த முக்கிய சந்திப்பு யாருடன்? எங்கே? அதைத் தொடர்ந்து நடந்த அசம்பாவிதம் தான் என்ன?… நாளை வரை காத்திருங்கள் பயணம் தொடரும்…

எழுத்துருவாக்கம்-(நேரு குணரட்னம்)

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …