இந்தியா செய்திகள்இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தமிழர்களின் கையில்! – விக்கி இடித்துரைப்பு

“இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உயர் அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவின் தென்கோடியும் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். எமக்கு கிடைக்கக்கூடிய உயர் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் இந்தியாவின் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாது. இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு – கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து விடாதீர்கள்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்தில் வைத்துத் தெரிவித்திருக்கின்றார்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா, உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது. இன்றும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் அவர் முக்கியமாகத் தெரிவித்ததாவது:-

இனக் கலவரம்

தற்போதைய ஜனாதிபதி இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று கூறுவதில் உறுதியாகவுள்ளார். ஒருவேளை விரைவில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற அவர் அவ்வாறு கூறி வருகின்றாரோ நாம் அறியோம். மீண்டும் ஒரு கலவரம் 1958, 1977 மேலும் 1983ல் வந்தது போல் இனியும் வருமோ என்ற பயத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். சென்ற ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தடம்புரண்ட சில இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள் இஸ்லாமியச் சகோதரர்களையும் மனக்கிலேசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே இலங்கையில் தமிழ்ப் பேசும் இனம் இன்று மிக மோசமான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மதிக்காத இலங்கை

தமிழர் நிலமெங்கும் தீவிரப்படுத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை உறுதி செய்து நிற்கின்றன. தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியையும் அவை மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டையும் வேண்டி சர்வதேசத்தின் முன்னிலையில் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசுக்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனைக்கூட கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சர்வதேச சமூகத்துக்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது.

தீராத பிரச்சினை

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு போர்க்குற்றங்கள் சம்பந்தமாகப் பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே சர்வதேச விசாரணையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இதனைச் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது உலகளாவிய உறவுகளான நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். போர் முடிவுக்கு வந்து பத்தாண்டு காலத்தின் பின்னரும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளவரை அரசியற் கைதிகளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புக்களை – தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர்

வட்டுவாகல் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோரும், வாழ்க்கைத் துணைகளும், சகோதரரர்களும், உறவினர்களும் இன்றும் கண்கண்ட சாட்சிகளாக இருக்க, அவர்களுடைய சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிந்து இப்பிரச்சினைக்கு நீதியான தீர்லைவ வழங்குவதற்கு மறுத்து வருகின்ற இலங்கை அரசு தற்போது காணாமல் போனோர் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தினையும் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.

இராணுவ மயமாக்கல்

இலங்கை அரசானது இராணுவ மயமாக்கலின் ஊடாக தொடர்ந்தும் தமிழ் மக்களது காணிகளைச் சுவீகரித்து வைத்திருப்பதன் மூலம் உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகளைத் தாமே மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் தொடர்ந்தும் பொதுச்சேவை நிர்வாக விடயங்களிலும் தலையீடு செய்து வருகின்றது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதினூடாக இலங்கை இராணுவம் தமிழர்களின் இருப்பை மலினப்படுத்துகின்றது.

அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய எமது பாதுகாப்புக்கு இடமில்லை என்பதை தொடர்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன. இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழ்த் தேசத்தை உறுதிப்படுத்துவது, அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்படுவது, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை அமைப்பது போன்ற விதத்திலேயே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்திற்கும் எமது வெளிநாட்டு உறவுகளுக்கும் கூறிவைக்கின்றேன்.

நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடங்களைத் தேடவேண்டிய நிலையே ஏற்படப் போகின்றது என்று எண்ண வேண்டியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் ’தமிழ்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து எமக்காக குரல்கொடுப்பதுடன் உரிய செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.

ஒற்றையாட்சி

இன அழிப்பில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பு ஒன்றே பாதுகாப்பான தீர்வாக அமையும். இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களிடையே இருக்கின்றது. ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்தப்படும் எந்தத் தீர்வும் தீர்வாகாது என்பதற்கு இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டமே சான்றாக அமைந்திருக்கின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் அன்று இந்தியாவைத் தீர்வு என்ற மாயைக்குள் சிக்கவைத்து இந்தியாவையும் எமது இளைஞர்களையும் மோதவைத்து பல கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தியதுடன் பின்னர் மிகவும் தந்திரமாக 13வது திருத்தத்தில் உள்ள மிகமுக்கிய சரத்துக்களையும் நீக்கிவிட்டு இன்று அதனை முற்று முழுதாக குப்பைக்குள் எறிவதற்குத் தயாராகி வருகின்றனர்.

இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு-கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து விடாதீர்கள். அதாவது இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் சிங்களத் தலைவர்களிடையே இந்தியா மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை நீங்கள் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

கட்டமைப்புத் தேவை

அடுத்து எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு மூலோபாய கட்டமைப்பை ஏற்படுத்தி நீங்கள் செயற்படவேண்டும். தென் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய மாநிலங்களின் சட்ட மன்றங்களையும் ஒரு பொதுக் கொள்கையின் கீழே கொண்டுவந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக மத்திய அரசினுடாக நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளிடமே வேண்டிக்கொள்கின்றேன். இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உயர் அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள். எமக்கு கிடைக்கக்கூடிய உயர் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் இந்தியாவின் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாது.

இங்கு இருக்கக்கூடிய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து தமிழக அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இறுதியாக, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் உயிர்துறந்து இனவழிப்புக்கான பரிகாரநீதி எனும் போராட்ட வலுவை எமக்கு ஏற்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையில் இது தொடர்பாக இன அழிப்பு தீர்மானம் ஒன்றையுங் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கின்றோம். இதனை சர்வதேச அளவில் கொண்டு சென்று நீதியை வென்றெடுப்பதற்கு இங்குள்ள தமிழ் உறவுகள் அனைவரும் உதவவேண்டும் – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close