இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பாலியல் ராக்கிங்: விசாரணை தீவிரம்!

- யாழ். பல்கலை தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி சொல்கின்றார்

பாலியல் ராக்கிங்: விசாரணை தீவிரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் புதுமுக மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் ரீதியிலான பகிடிவதை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி தெரிவித்தார்.

குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக சட்டதிட்டங்களுக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய அதிகாரிகள் குழு பாலியல் பகிடிவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சில முடிவுகளை எடுத்துள்ளது.

மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளைப் பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (Sri Lankan Police Cyber crime unit) ஊடாக விசாரணை நடத்தல் மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய முடிவுகள் அவர்களால் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பாலியல் ரீதியிலான – வக்கிரத்துடன் கூடிய பகிடிவதை தொடர்பாக இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்குத் தெரிவான மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என்றும், ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விடயங்கள் தொடர்பாகப் பல மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன

பல்கலையில்
கூட்டம்

அதையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுக் கிளிநொச்சி வளாகத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களையும் வழங்குவோம் என்று மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆளுநர்,
கல்வி அமைச்சு
விசாரணை

அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

அவர் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்வார் என்று தெரியவருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

மனித உரிமை
ஆணைக்குழுவும்
விசாரணை

இந்தப் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் ரீ.கனகராஜ் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close