உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது தாங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலியானதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது.

இதனால் ஈரானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு உள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவம் உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் பணிக்காக ஈராக் வந்துள்ள அமெரிக்க ராணுவம் பிஸ்மாயக், தாஜி, அல்-அசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் தனது தளத்தை அமைத்து இருக்கிறது. இதேபோல் ஜெர்மனி, கனடா படைகளும் ஈராக்கில் உள்ளன.

இந்த நிலையில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி, சிரியா சென்று விட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தார். விமானநிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்ற போது, அவர் பயணம் செய்த கார் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானியும் அவருடன் சென்ற சிலரும் பலி ஆனார்கள்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஈரான், அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்தது. ஈரான் ராணுவத்தின் புதிய தளபதியாக பொறுப்பு ஏற்ற இஸ்மாயில் கானி, “சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” என்று சூளுரைத்தார்.

சுலைமானி கொல்லப்பட்டதும் ஈராக்கிலும், அமெரிக்காவுக்கு எதிரான குரல் வலுத்தது. அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், ஈராக்குக்கு பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா, அந்த நாட்டில் இருந்து வெளியேற முடியாது என்று கூறிவிட்டது.

இதன் காரணமாக அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரான் நேற்று அதிகாலை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் விமானப்படை தளம் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அந்த இரு தளங்கள் மீதும் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1.45 மணி முதல் 2.15 மணி வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாகாணத்தில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக கருதப்படுகிறது.

அமெரிக்க தளங்களை தகர்க்க ஈரான் பயன்படுத்தியது பெடாக் 313 ரக ஏவுகணைகள் ஆகும். தரையில் இருந்து வான் மற்றும் தரையில் உள்ள மற்றொரு இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பெடாக் 313 ரக ஏவுகணை சோதனையை ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தியது. சுமார் 500 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகளை பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

ஈரான் வீசிய ஏவுகணைகள் எதுவும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும், அவை இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்து இருக்கிறது. அத்துடன் இந்த தாக்குதலில் அமெரிக்க படையினர் 80 பேர் கொல்லப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ தளவாடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் கூறி உள்ளது.

இந்த தாக்குதலில் தங்கள் படைக்கு எந்த சேதமும் இல்லை என்று தெரிவித்துள்ள ஈராக் அரசு, அய்ன் அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகள் தாக்கியதாகவும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகள் தாக்கியதாகவும் கூறி இருக்கிறது.

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட அர்பில் முகாம், ஈராக்கில் குர்துக்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் உள்ளது. அங்குள்ள பிராந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க ராணுவ முகாமோ அல்லது அமெரிக்க தூதரகமோ ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றார்.

ஆனால், அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை உறுதி செய்த அமெரிக்கா, உயிரிழப்பு மற்றும் சேதங்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.

அமெரிக்க படை தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நாட்டின் ‘முகத்தில் கொடுத்த அறை’ என ஈரான் கூறி உள்ளது.

ஏவுகணை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் சதிகளை முறியடிக்கும் தலைவராக சுலைமானி திகழ்ந்தார். துணிச்சல் மிக்க சுலைமானி, பாலஸ்தீன மக்களுக்கும் உதவியவர்.

அவர் கொல்லப்பட்டதன் மூலமாக நம்முடைய புரட்சி புத்துயிர் பெற்றுள்ளது. நமக்கான எதிர்ப்பு தொடர்ந்து நிலவுகிறது. நேற்று இரவு அமெரிக்காவின் முகத்தில் அறை கொடுத்துள்ளோம்” என்றார்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் செயல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்க நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை போதாது என்றும் அப்போது அவர் கூறினார்.

இதேபோல் தொலைக்காட்சியில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தாங்கள் தவறு செய்தால் சரியான பதிலடி கிடைக்கும் என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவர்கள் புத்திசாலியாக இருந்தால் இப்போதைய சூழ்நிலையில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்கமாட்டார்கள் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவேத் ஜாரிப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “ஐ.நா. சாசனத்தின் 51-வது பிரிவின் கீழ் தற்காப்பு நடவடிக்கையை எடுத்து உள்ளோம், ஈரான் மக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியவர்களின் தளங்கள் இலக்காக்கப்பட்டது. ஈரான் பிரச்சினையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ விரும்பவில்லை. ஆனால், ஈரான் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என தெரிவித்தார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபோன்ற பொறுப்பற்ற, அபாயகரமான செயல்களில் இனிமேலும் ஈடுபட வேண்டாம் என்று ஈராக்கை அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஈராக் அதிபர் பர்ஹாம் சலேக்கும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பதற்றத்தை தணிக்கும் வகையில் அமைதி காக்குமாறு அமெரிக்காவையும், ஈரானையும் பல்வேறு உலக நாடுகள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார், அதில், “எல்லாம் நன்றாக உள்ளது. ஈரானில் இருந்து, ஈராக்கில் உள்ள இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டு உள்ளன.

இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆய்வு நடக்கிறது. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ராணுவம் நம்மிடம் உள்ளது. இதுதொடர்பாக நான் அறிக்கை வெளியிடுவேன்,” என்று கூறி இருக்கிறார்.

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபடக்கூடும் என கருதப்படுகிறது.

அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமைதிக்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டால் வரவேற்போம் என ஈரான் தெரிவித்து உள்ளது. பதற்றத்தை தணிக்க நல்ல நட்பு நாடான இந்தியா உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில், சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனிம், “உலகில் அமைதியை பராமரிப்பதில் இந்தியா பொதுவாக மிகச்சிறந்த பங்கை கொண்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அனுமதிக்காமல் அமைதியை ஏற்படுத்த அனைத்து நாடுகளின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம், குறிப்பாக இந்தியாவின் முயற்சியை வரவேற்கிறோம். இந்தியா எங்களுக்கு மிகச்சிறந்த நட்பு நாடாகும்” என கூறினார்.

“நாங்கள் போரை விரும்பவில்லை, இந்த பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் அமைதி மற்றும் வளர்ச்சியைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான இந்தியாவின் எந்த ஒரு முயற்சியையும், திட்டத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஈரானில் இனி நடக்கபோறது மட்டும் பாருங்க

ஈராக்கை வாய்மொழியாக எச்சரித்த ஈரான்

Tags
Show More

Related Articles

Back to top button
Close