Breaking News

பல்கலை மாணவ சமூகத்தினால் யாழ். சமூகத்துக்கே பேரவமானம்!

பல்கலை மாணவ சமூகத்தினால் யாழ். சமூகத்துக்கே பேரவமானம்!

உலகத்தையே வியக்க வைக்கும் வீர தீர ஈகப் போராட்டத்தை முன்னெடுத்த ஈழத்தமிழர் சமூகம், அந்த வியத்தகு போராட்டதுக்குக் களம் அமைத்து வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தின் இன்றைய தறிகெட்ட – பாலியல் வக்கிரம் நிறைந்த பகிடிவதைக் கொடூரத்தால் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

இந்தப் பகிடிவதை தொடர்பில் வெளியாகும் தகவல்கள் அதிரவைப்பனவாக உள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் (குறிப்பாக மாணவிகள்) தங்கள் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த அச்சத்தால் உண்மைகளை வெளிப்படையாக அம்பலப்படுத்த அஞ்சுகின்றமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மாணவர்களின் பெயரில் இயங்கும் சில கொடூரப் பண்பியல்பும் வக்கிர சிந்தனையும் கொண்ட மனநோயாளர்கள் மேற்கொள்ளும் கொட்டம் கட்டு மீறியிருக்கின்றது.

தங்கள் அராஜகங்களை அவர்கள் எல்லை மீறிக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். அதை முற்றாகத் தடுத்து நிறுத்த லாயக்கற்ற – அல்லது கையாலாகாத – அல்லது அதற்கு விருப்பமற்ற – அல்லது இக்கொடூரங்களைப் புரியும் ‘கிரிமினல்களை’ பகிரங்கமாக அம்பலப்படுத்தத் துணிச்சலற்ற, கோழைத்தனமான – அல்லது அவர்களைப் பாதுகாக்கும் கூட்டு மனநிலை கொண்ட – அல்லது நமக்கேன் வீண்வம்பு என்று பொறுப்பற்று செயற்படுகின்ற – சக பல்கலை மாணவர்களும், அவர்களின் மாணவர் அமைப்புகளும் தங்களின் விட்டேத்தியான இந்தச் செயற்போக்கால் பகிடிவதை புரியும் கிரிமினல்களுக்குத் தங்களை அறியாமலேயே கவசமாகி நிற்கின்றார்கள் என்பதுதான் விசனத்துக்குரியது என்பதை ‘காலைக்கதிர்’ ஆசிரியபீடம் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

தங்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் பகிடிவதை என்ற கிரிமினல் போக்கைத் தடுக்க இலாயக்கும் விருப்பும் அற்ற அமைப்புகள் எல்லாம் தமிழர் தேசியம் பேசிக் கொண்டு, கரிநாளுக்கு அழைப்பு விடுப்பதும், அரசியல் விவகாரங்களில் மூத்த அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் வழிநடத்த முற்படுவதும், அத்தரப்புகளின் கருத்துகளுக்கு ‘காலைக்கதிர்’ போன்ற அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுப்பதும் சமூக அபத்தமாகும்.

பகிடிவதை என்ற கிரிமினல்தனம் நடக்கவில்லை, அதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று மாணவர் அமைப்புகள் விதண்டாவாதம் பண்ணினால் அதன்மூலம் அந்தக் கிரிமினல் கொடூரத்துக்கு தாமும் துணைபோகின்றார்கள் என்பதை அந்த அமைப்புகள் உணர வேண்டும்.

பகிடிவதைக்கு எதிராக வெறும் வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிடுவதோடு மாணவர் அமைப்புகள் பொறுப்பிலிருந்து தப்பிவிடலாம் என்று எண்ணமுடியாது; எண்ணக் கூடாது.

சொல்லிலும் செயலிலும் அதைச் செய்து காட்டாமல் இந்த விவகாரம் குறித்து மாணவர் அமைப்புகள் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்குமானால் அவற்றை அம்பலப்படுதுவதற்காகவும், சமூகக் கிரிமினல்களைத் தோலுரித்துக் காட்டவும், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என்ற உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு பகிடிவதை கொடூரம் புரியும் கிரிமினல்களைப் பாதுகாக்கும் பிரகிருதிகளின் முகமூடிகளைக் கிழித்து, அவர்களை சமூகத்தின் முன்பகிரங்கப்படுத்தவும் ஊடகங்களை அணிதிரட்டிக் காத்திரமான நடவடிக்கை எடுத்து, தன் சமூகக் கடமையை ‘காலைக்கதிர்’ நிறைவு செய்யும் எனத் தன்வாசகர்களுக்கு அது இச்சமயத்தில் உறுதி கூற விரும்புகின்றது.

– ‘காலைக்கதிர்’ (07.02.2020)

தூக்கிலிடுவது தொடர்பாக சிறை நிர்வாகத்தின் மனு தள்ளுபடி

சீனாவில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About விடுதலை

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)

Today rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 26, 2020)   இன்றைய …