Breaking News
அண்ணா சமாதி அருகே ஜேசிபி

அண்ணா சமாதி அருகே ஜேசிபி…கோட்டையில் கோப்புகள் ஆய்வு; காவல்துறையினர் அலர்ட்

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாத்துரை சமாதி அருகே ஜேசிபி எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் பரவியதும் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கோபாலபுரம் இல்லம் முன்பு திரண்டு வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

இதனிடையே, கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. எனினும், கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்கவும் வேண்டாம் எனவும், அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாத்துரை சமாதி அருகே ஜேசிபி எந்திரம் மற்றும் இரண்டு மாநகராட்சி லாரிகள் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா சமாதி தொடர்பான கோப்புகள் இன்று பிற்பகல் முதல் ஆராயப்பட்டு வருவதாகவும், சமாதியின் பின்புறம் உள்ள பகுதி ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிக்காக இந்த வேலை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், சென்னை ராஜாஜி அரங்கம் சுத்தம் செய்யப்படும் பணிகளும், விளக்குகள் பொருத்தப்படும் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. மேலும் அரங்கத்தை சரி பார்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அலர்ட் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். மத்தியிலிருந்து முக்கிய தலைவர்கள் வருவதால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விடுப்பில் உள்ள காவலர்கள் பணிக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவி்ல்லை என்றும் தெரிகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …