நடிகர் விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

நடிகர் விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் கடந்த 5-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறை விசாரணைக்காக கடந்த 5-ந் தேதி இரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜயை, வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு விஜய் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை முடிந்து நடிகர் விஜய் நேற்று முன்தினம் காலை படப்பிடிப்புக்காக நெய்வேலிக்கு வந்தார்.

இதற்கிடையே நடிகர் விஜய்யின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயில் முன்பு போராட்டம் செய்வதற்காக திரண்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், விஜய் ரசிகர்களும் ஒன்றிணைந்து, பா.ஜ.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் காரில் வெளியே வந்து கொண்டிருந்ததை பார்த்த அவரது ரசிகர்கள், ஓடோடிச்சென்று சுரங்கத்தின் நுழைவு வாயில் முன்பு நின்றனர்.

இதனால் நடிகர் விஜய் வெளியே வரமுடியாமல் தவித்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் பிறகு நடிகர் விஜய் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

2-வது நாளாக…

இதற்கிடையே நேற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் விஜயை காண்பதற்காக சுரங்கத்தின் நுழைவு வாயில் முன்பு அவரது ரசிகர்கள் கொடியுடன் திரண்டனர்.

இளம்பெண்களும் அதிகளவில் நின்றதை காண முடிந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் மாலை 6 மணியளவில் காரில் 2-வது சுரங்கத்தின் நுழைவு வாயில் வழியாக வெளியே வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கே திரண்டு நின்ற ரசிகர்கள் நடிகர் விஜயை காண, சுரங்கத்தின் நுழைவு வாயில் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தடுக்க முயன்றனர்.

ரசிகர்கள் விரட்டியடிப்பு

ஆனாலும் ரசிகர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனால் ரசிகர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் நடிகர் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கணவனைக் கொன்ற மனைவி பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …