Breaking News

மதுஷின் கூட்டாளி வீட்டில் இராணுவச் சீருடைகள் மீட்பு! ரி – 56 துப்பாக்கி ரவைகளும் சிக்கின!!

மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கின்றது விசேட அதிரடிப்படை.

கொழும்பில் சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது..

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்தப் போதைப்பொருள் வந்துள்ளது என அறியப்பட்டுள்ளது. இப்படி பல தடவைகள் போதைப்பொருட்கள் விசேட படகுகள் மூலம் அங்கு வந்துள்ளன.

இவற்றுக்கும் மதுஷுக்கும் தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுஷின் எதிரி என்று கருதப்படும் மொரிஸ் என்பவர் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

தங்கம் கடத்தப்பட்டதா?

டுபாயில் இருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்தப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு ஒரு தொகுதியும் இலங்கைக்கு ஒரு தொகுதியும் அனுப்பப்படும் வியாபாரம் குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன.

விமானத்தில் தங்கம் கொண்டுவருவது ஆபத்தாக இருப்பதாலும் – விமான நிலையங்களில் அதிகாரிகளை சமாளிக்கும் செலவு அதிகரித்து வருவதாலும் இப்படி படகுகள் மூலம் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துள்ளன.

இதற்கிடையில் அதிவேக விசைப்படகுகள் பலவற்றை கொள்வனவு செய்து அவற்றை வேறு நபர்கள் பெயர்களில் மதுஷ் வைத்திருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது..

கைதுகள்

மதுஷின் நெருங்கிய சகா ஒருவர் குறித்து தகவல் வெளியானது. இராணுவத்தில் லான்ஸ்கோப்ரலாகப் பணியாற்றிய அவரின் கம்புறுப்பிட்டிய வீட்டை நேற்றுமுன்தினம் சோதனையிட்டபோது இராணுவச் சீருடைகள், கைவிலங்குகள் மற்றும் ரி – 56 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் நவீன ஆயுதங்களை இயக்கும் அறிவுரைகள் கொண்ட ஆவணங்கள் பலவும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மதுஷ் ரீமில் துப்பாக்கி சுடுவதில் முன்னணி உறுப்பினராக செயற்பட்ட இவர் தற்போது தலைமறைவாகியுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

மதுஷுடன் தொடர்பில் இருந்த படை உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதால் அவை தொடர்பிலும் இரகசிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

டுபாயில்

டுபாயில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் சகாக்கள் அடுத்த 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு மீண்டும் தண்டனைக்கேற்ப தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை அவர்களது உறவினர்கள் பார்வையிட வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர அனுமதி வழங்க டுபாய் பொலிஸ் தீர்மானித்துள்ளது. ஆனால், அவர்களைப் பார்க்க இதுவரை யாரும் முயலவில்லை. அங்கு சென்று அவர்களை சந்திக்கும்போது பேசப்படும் விடயங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது வேறு ஒரு பிரச்சினையைக் கொண்டுவரலாம் என உறவினர்கள் கருதுவதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று பொலிஸ் கருதுகின்றது

இத்தாலி உறவு

மதுஷுக்கு இத்தாலியிலும் பெரிய அளவில் தொடர்புகள் இருக்கின்றன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

முன்னர் ஒரு காலத்தில் நீர்கொழும்பை ஆட்டிப்படைத்த மதுஷ் அங்கே இருந்த இதர பாதாள உலக ரீம்களில் இருந்து இத்தாலிக்குத் தப்பிச் சென்ற உறுப்பினர்கள் பலருடன் தொடர்புகளை வைத்திருந்து அதன் மூலம் பல வேலைகளைச் செய்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.

மதுஷ் தனிப்பட்ட முறையில் ஒரு விடயத்தை உறுதியாக நம்புவாராம். தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு விடயத்தை சொன்னால் சரியாகச் செய்வார்கள் என்று திடமாக நம்பும் மதுஷ் அதன் காரணமாகவே அப்படியான இளைஞர்களை அருகில் நம்பிக்கையாக வைத்திருந்தார் எனத் தகவல்.

இலங்கையில் மட்டுமல்ல இத்தாலியில் சீட்டுப் பிடித்தல் மற்றும் கப்பம் கோரல்களில் மதுஷின் சகாக்கள் ஈடுபட்டிருந்தார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

இரத்தினக்கல் கொள்ளை

பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற இரத்தினக்கல் கொள்ளை குறித்து ஒரு விடயத்தை சொல்லவேண்டும். அதில் ஈடுபட்ட ஒருவர் ஆஸ்திரேலிய பிரஜை என்று சொல்லப்பட்டது. ஆனால், அது ஆஸ்திரேலியா அல்ல ஒஸ்ட்ரியா என்பதே சரி.

இந்த நபர் மதுஸுக்கு மிகவும் நெருக்கமானவர் . இவரை இரத்தினக்கல் வாங்க அழைத்துச் சென்ற ஒரு தரகர் நேற்று பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

(அந்த இரத்தினக்கல் மற்றும் குறித்த வெளிநாட்டவர் இரத்தினக்கல்லைப் பரிசோதனை செய்ய ஒரு தடவை வர்த்தகரின் வீட்டுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட உதவி – ஹிரு தொலைக்காட்சி)

 

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …