இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு இளைஞரும் யாழ். மாணவியும் தற்கொலை!

- பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்புப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இராமச்சந்திரன் வசந்தராசா எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

கடந்த 2012ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வசந்தராசாவுக்கு எதிரான வழக்கொன்று நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் அவ்வழக்குக்குச் செல்லாத நிலையில் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவருக்குச் சார்பாக பிணை கையொப்பமிட அவரது சகோதரர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கைப் பார்ப்போம் எனத் தனது தம்பியிடம் கூறியபோது தம்பி வழக்குக்குச் செல்லப் பயந்து, கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டம், கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் கிழக்கில் வசித்துவரும் மகேஸ்வரன் கஜேந்தினி (வயது 20) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே தூக்கில் தொங்கி மரணமாகியுள்ளார்.

குறித்த மாணவி தந்தையை இழந்தவர். வவுனியாவில் உறவினர் ஒருவருடைய மரண நிகழ்வுக்காக நேற்றுமுன்தினம் தாயாரும் சகோதரர்களும் சென்றிருந்த நிலையில் பேர்த்தியாரின் பாதுகாப்பில் இருந்த அவர் மலசலகூடத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close