Breaking News

அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வு! – கோட்டாவுக்கு சுமந்திரன் பதிலடி

“அதிகாரப் பகிர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பான்மை சமூகங்களின் அடக்குமுறையினாலேயே அதிகாரப் பகிர்வு கோரிக்கை எழுகின்றது. அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதிகாரப் பகிர்வை நிராகரித்தும், பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவின்றி அதைச் செயற்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் பதிலளிக்கையில்:-

“போர் நடந்தபோது, 13ஆவது அரசமைப்பை முழுமையாக அமுல்படுத்துவேன் என்றும், அதற்கும் அப்பாலும் சென்று அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவேன் என்றும் அப்போதைய ஜனாதிபதி – கோட்டாபயவின் தம்பி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகள் இந்தியாவுக்கு எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்திருந்தார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவின் இடைக்கால அறிக்கையை எடுத்துச் சென்று, இந்தியாவின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்து இதை முழுமையாக அமுல்படுத்துவேன் எனவும் அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையான அதிகாரப் பகிர்வின் மூலமாக தாங்கள் வழங்குவோம் என்ற வாக்குறுதியை இந்தியாவுக்கும் முழு சர்வதேசத்துக்கும் கொடுத்து அனைவருடைய உதவிகளையும் போர் வெற்றி முயற்சிக்குப் பெற்றுக்கொண்டவர்கள்தான் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய அரசும்.

மஹிந்த அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவர்தான் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ. ஆகையால், இந்த விடயங்கள் அவருக்கும் நன்றாகத் தெரிந்த விடயங்களாகவே இருக்கின்றன. ஆனால், இப்போது திடீரென்று முன்னைய தலைவர்கள் எல்லாம் அதிகாரப் பகிர்வின் மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்போம் என்று சொன்னமை தவறான கூற்று என்றும், அது செய்ய முடியாததொன்று என்றும் அவர் சொல்வது மிகவும் வியப்பான ஒரு விடயமாக இருக்கின்றது.

பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ஆதரவளிக்காத எதையும் செய்ய முடியாது என இப்போது அவர் பல தடைவைகள் சொல்லிவிட்டார். அதிகாரப் பகிர்வு என்பது பெரும்பான்மையான மக்கள் இணங்கித்தான் செய்யவேண்டும் என்பதல்ல. அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை எழுவதே பேரினவாதத்தின் காரணத்தினால்தான்.

ஒரு நாட்டுக்குள்ளே அரச அதிகாரங்கள் மக்களிடத்தே பகிரப்படாமல் ஒரு குறித்த மையத்தில் இருக்குமாயின் பெரும்பான்மைச் சமூகத்துக்கு அது சாதகமாக இருக்கும். நிரந்தரமாக பெரும்பான்மையாக ஒரு சமூகம் இருக்கும்போது அங்கே ஜனநாயகம் சரியான முறையில் செயற்பட முடியாது. ஆனபடியால்தான் அப்படியான நாடுகளில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று கேரப்படுகின்றது.

அவ்வாறு வெவ்வேறு பிராந்தியங்களுக்கு அதிகாரம் பகிரப்படுகின்றபோது பல பிராந்தியங்களில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தபோதிலும்கூட ஓரிரு பிராந்தியங்களிலே அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினராக இருக்கலாம். ஆகையினால் அந்த எண்ணிக்கையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்கின்ற தோரணைகளை விலக்குகின்ற – முழுமையான ஜனநாயகத்தை அமுல்படுத்துகின்ற ஒரு முறைமைதான் அதிகாரப் பகிர்வு முறை. அதைத்தான் சமஷ்டி என்று சொல்லுவார்கள்.

பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்காககத்தான் சமஷ்டி முறை செயற்படுத்தப்பட வேண்டும். இது சம்மந்தமாக 70 வருட காலமாக மாறாமல் ஒரே நிலைப்பாடாக தமிழ் மக்களின் நிலைப்பாடு இருந்திருக்கின்றது. அவ்வாறே தொடர்ந்தும் இருக்கின்றது.

கடந்த தேர்தலிலும் இப்படியான மனநோக்குடைய ஒருவருக்கு வாக்களிக்காமல் விட்டதிலிருந்தும் தமிழ் மக்கள் தங்கள் ஜனநாயகத் தீர்ப்பைக் கொடுத்திருக்கின்றார்கள். எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கிறவர்கள் அரசியல் தீர்வில் எதைக் கோருகின்றார்கள். ஒரே நிலைப்பாட்டில் இருந்து எதைச் சொல்கின்றார்கள் என்பதே முக்கியமானது.

ஆகவே, ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தக் கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். திரும்பவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகத்தான் இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்பட முடியுமென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி தன்னுடைய கருத்துக்களைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

அதேபோல் நாட்டில் அடக்குமுறை அதிகரித்திருக்கின்றது. கருத்தச் சுதந்திரத்திற்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. பலவிதமான அடக்குமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் நாங்கள் தேர்தலுக்கு முன்னதாகவே எடுத்துச் சொல்லியிருந்தோம்.

எங்கள் மக்களின் உரிமைகளைப் பொறுத்தவரையில் நாங்கள் இப்படியான அடக்குமுறைகளுக்கு இடங்கொடுக்கமாட்டோம். அப்படியான அடக்குமுறையின் மூலமாக எங்கள் சமூகத்தின் – எங்கள் மக்களின் சுயாதீனத்தைப் பாதிக்கும் எதையும் நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதையும் தெளிவாக நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம். அரசின் அடக்குமுறைக்குத் துணை போகின்ற தங்களை தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்கின்ற தமிழ் தலைவர்களுக்கும் நாங்கள் இதனை ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

வரப்போகும் நாட்களில் நாட்டில் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்படுவது தெரிகின்றது. நாட்டில் இருக்கின்ற மற்றைய முற்போக்கு சக்திகளுக்கு நாங்கள் இந்த வேளையில் ஒரு அழைப்பை விடுக்க விரும்புகின்றோம். அதாவது நாட்டில் ஜனநாயக வெளி இருக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. அந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களோடு இணைந்து முழுமையாகச் செயற்படத் தயாராக இருக்கின்றது.

எங்கள் தீர்வுத் திட்டம் எப்போதும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பதுதான். ஆனால், பல தடவைகளில் நாங்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றதன் பிரகாரம் சமஷ்டி என்கின்ற ஆட்சி முறை ஒரு முறையாக இருக்க முடியாது. அது வெவ்வேறு நாடுகளுகளிலே வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறது.

ஆகவே, சமஷ்டி என்று நாங்கள் சொல்கின்றபோது அதன் அடிப்படைக் குணாதிசயங்கள் தென்பட வேண்டும். சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவையில்லை. ஆனால், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு தொடர்ச்சியாக எங்கள் மக்கள் சார்பாக நாங்கள் உழைப்போம்” – என்றார்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …