முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

பாலியல் ராக்கிங்: 2ஆம் வருட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை!

- 'வட்ஸ்அப் குறூப் அட்மின்' அவர் என்று தெரிவிப்பு

பாலியல் ராக்கிங்: 2ஆம் வருட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் மோசமான முறையில் பாலியல் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய இரண்டாம் வருட மாணவனான பி.சிவஜெயனுக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ, விடுதிக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

“ஆரம்பகட்ட விசாரணைகளில் பாலியல் துன்புறுத்தல், பகிடிவதை தொடர்பில் தொடர்புபட்டமைக்கு நேரடியாக சம்பந்தம் இருப்பது முதல்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதை தடுப்பு 946 சுற்றறிக்கைக்கு அமைவாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகின்றது” என்று மாணவனுக்கு வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் முதுநிலை மாணவர்கள் சிலர் புதுமுக மாணவிகள் சிலர் மீது மோசமான பாலியல் பகிடிவதையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து ஒழுக்காற்று குழு விசாரணைகளை ஆரம்பித்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்துக்குச் சென்றிருந்த 10 பேர் கொண்ட குழு அங்குள்ள அதிகாரிகள், மாணவர்கள் சிலரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் மாணவி, நாளை திங்கட்கிழமையே பல்கலைக்கழத்துக்குள் பதிவுக்காக நுழைவார் என்பதால் அவரிடம் விசாரணைகளை இந்தக் குழு இன்னமும் முன்னெடுக்கவில்லை.

இணையத்தளங்களில் வெளியான தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு அமைவாக இது தொடர்பான ‘வட்ஸ்அப் குறூப்’பை உருவாக்கி அதனை நிர்வகித்த மாணவன் இனங்காணப்பட்டார். அவரது குரல் மாதிரிகளும் ஆராயப்பட்டன. மாணவனும் குற்றச்சாட்டை ஏற்றுள்ளதாகத் தெரிவித்து விசாரணைக் குழு 12 பக்கங்களிலான அறிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியிடம், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கையளித்துள்ளது.

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close