இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியது இந்தியா!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று வியாழக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

இதன்போது இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிப்பாட்டை இலங்கைக்கு நினைவுபடுத்தியதாகவும் ரவீஷ்குமார் கூறினார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்தச் செயல் முறை நடந்து வருகின்றது என்றும், விரைவில் படகுகள் விடுவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கைக் காவலில் தற்போது 52 படகுகளும், 15 இந்திய மீனவர்களும் உள்ளனர் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இரு தரப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய நலன்கள் குறித்தும் ஆக்கபூர்வமான பேச்சு இடம்பெற்றது. இந்தியா மற்றும் இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியத் தலைவர்களின் பார்வை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close