இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர்களைச் சீண்டாதீர்! – ராஜபக்ச அரசுக்கு சஜித் எச்சரிக்கை

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு விதண்டாவாதம் பேசி தமிழ் மக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம்கொள்ள வைக்கக்கூடாது.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் விரும்புகின்ற அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டோம் என்று நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். அரசியல் தீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

மேற்படி கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்கள் பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கேட்கின்றார்கள். ஒற்றையாட்சி வேண்டாம் என்றோ அல்லது சமஷ்டிதான் வேண்டும் என்றோ அவர்கள் ஒற்றைக்காலில் நிற்கவில்லை. சொல்லாடல்களை வைத்து அவர்களைச் சீண்ட வேண்டாம். சம உரிமையுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறே அவர்கள் கேட்கின்றார்கள். அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்படாமையால்தான் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்து நாடு பெரும் அழிவுகளைச் சந்தித்தது. அந்த அழிவுகளை அபிவிருத்திகள் ஊடாகச் சீர்செய்யலாம். ஆனால், அன்று அரசியல் தீர்வு காணப்படாமையே அந்த அழிவுகள் ஏற்படக் காரணமாகும். எனவே, அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும்” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close