Friday , September 21 2018
Home / Headlines News / ஶ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
ஶ்ரீலங்காவின்

ஶ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் பிரதிநிதிகளும் தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இந்தியாவிற்கான மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு புது டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி வரவேற்றார்.

மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்ற சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில்,

விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதி புது டெல்லி நகரை வந்தடைந்தார். அவர் 12 ஆவது இந்திய – இலங்கை உறவுகள் மற்றம் எதிர்கால நோக்கு தொடர்பிலான பகிரங்க கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

என பதிவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என கூறும் சுப்ரமணியன் சுவாமி யார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரான சுப்ரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியை நரேந்திர மோடி ஆட்சியின் முக்கிய சூத்திரதாரியாக இந்திய அரசியல் விமர்சகர்கள் அழைக்கின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சுப்ரமணியன் சுவாமியே தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ​2G அலைக்கற்றை மோசடி தொடர்பில் அவர் நீதிமன்றத்தை நாடினார்.

இதன் காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்தனர்.

இவரது செயற்பாடுகள் காரணமாக தென்னிந்திய அரசியலில் மாத்திரம் அல்லாது இந்தியாவின் தேசிய அரசியலிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட சுப்ரமணியன் சுவாமி தற்போது மஹிந்த ராஜபக்ஸவை இந்தியாவிற்கு அழைத்து, அவர் பொரும்பாலும் அடுத்த ஜனாதிபதியாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடா?

இத்தகைய கருத்தை வௌியிடுவதன் மூலம் அவர் சுயாதீன நாடு ஒன்றின் ஜனாதிபதி பதவி தொடர்பில் யாருடைய துணை கொண்டு அழுத்தம் பிரயோகிக்கின்றார்?

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் South China Morning Post பத்திரிகைக்கு கருத்து வௌியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, தமது தோல்விக்குப் பின்னால் இந்தியாவின் ரோ அமைப்பு இருப்பதாகக் கூறினார்.

இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டது.

இந்தியா தம்மை தோற்கடித்ததாகக் கூறி வந்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது இந்தியாவுடன் செய்து வருகின்ற கொடுக்கல் வாங்கல் என்ன?

மஹிந்த ராஜபக்ஸ மாத்திரம் அல்லாது இலங்கை பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகளில் உள்ள பலர் தற்போது இந்தியாவில் இருக்கின்றனர்.

இந்தக் குழுவில் அடங்குகின்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கயந்த கருணாதிலக்க , மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , விஜித ஹேரத் ஆகியோரும் இந்தியாவிற்கு சென்ற இலங்கை பிரிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Check Also

யாஷிகாவின்

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் …