Breaking News

இலங்கையில் மீண்டும் களைகட்டும் தேர்தல் திருவிழா!

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு அரசியல் களம் அமைதி காணும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசியல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் இலங்கை அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு இன்னும் 3 மாதங்கள் எஞ்சியிருந்தாலும் பிரதான கட்சிகள் முன்கூட்டியே ஆயத்தப்பணிகளில் இறங்கியுள்ளதால் வெகுவிரைவிலேயே தேர்தல் திருவிழா மீண்டுமொருமுறை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்முறையும் மும்முனைப்போட்டி நிலவினாலும் அது வழமையைவிட வித்தியாசமாக இருக்கும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

நாடாளுமன்றம்
எப்போது
கலைக்கப்படும்?

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், சபை அமர்வு கூடிய முதல் நாளிலிருந்து ஒன்றரை வருடங்கள் முடிவடைந்ததும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதியிடம் இருந்தது.

எனினும், 19ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்ற தினத்திலிருந்து நான்கரை வருடங்கள் முடிவடைந்த பிறகே, சபையின் அனுமதியுடன் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 2015 செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்றது. எனவே, 2020 மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரம் தேர்தல் நடத்தப்படலாம்.

தாவல் மன்னர்களும்
தவளை அரசியலும்

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்றதால் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றிநடை போடும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்து வருகின்றனர்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குழம்பிப் போயுள்ளனர்.

தற்போது கட்சி தாவினால் இறுதி நேரத்தில் இரு தரப்பிலுமே வேட்புமனுவுக்கு ‘வேட்டு’ வைக்கப்படலாம் என்பதால் தேர்தல் முடிவடையும் வரையில் ‘மதில்மேல் பூனை’யாக இருந்து வெற்றி பெற்றதும் தாவுவதே சிலரின் முடிவாக இருக்கின்றது.

மேலும், சிலர் முன்கூட்டியே தாவக்கூடும் என அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாஸவுடன் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியிருந்த போதிலும் தேர்தலுக்கு முன்பும் – பின்னரும் தாவல்கள் நடைபெறவுள்ளமை கண்கூடு.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி இலக்கு

சிங்கள – பௌத்த வாக்குவங்கி 90 சதவீதம் தமது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது என்பதால் ஏனைய வாக்குகளையும் முழுமையாக வேட்டையாடும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இறங்கியுள்ளது.

இதன்காரணமாகவே நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கும் வகையிலான மக்கள் ஆணையை அக்கட்சி உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.

1977இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைபி பலம் கைவசம் இருந்ததால் புதிய அரசமைப்பை உருவாக்கியதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் உருவாக்கினார்.

இலங்கையை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்வதற்கு ஜே.ஆரின் இத்தகைய அதிரடி நகர்வுகளே காரணம் என ஒரு தரப்பு கூறினாலும், மற்றுமொரு தரப்பு மாறுபட்ட கோணத்தில் இன்றளவிலும் விமர்சனங்களை முன்வைத்துதான் வருகின்றது.

அதேபோன்று சில அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே அமோக வெற்றியை எதிர்பார்க்கின்றது மொட்டு கட்சி.

சிலவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு கட்சி வெற்றிபெற்று – மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் அதாவது 150 ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும், எதிரணி உறுப்பினர்களை வளைத்துப் போட்டேனும் அந்தப் பலத்தை பெறும் நகர்வு ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாகும்.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி பக்கம் முக்கிய உறுப்பினர்கள் இருப்பதால் வேட்புமனு தயாரிப்பின்போது நெருக்கடி உருவாகும். அத்துடன், தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்தும் சிக்கல் எழக்கூடும்.

இரண்டாவது வாய்ப்பை
தக்க வகையில்
பயன்படுத்துமா ஐ.தே.க.?

தேர்தல் காலங்களிலும், முடிவுகள் வெளிவந்த பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல்கள் வெடிப்பது வழமையான நிகழ்வாக மாறிவிட்டது. அக்கட்சிக்கு அரசியல் ரீதியில் பின்னடைவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதுகூட உட்கட்சி சண்டை சந்திவரை வந்த பின்னரே சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட்டது. தற்போதும் அதே நிலை நீடிக்கின்றது. இதனால் ஐ.தே.க. ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியிருந்தாலும், அது சஜித்துக்கு வைக்கப்பட்ட பொறியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் சஜித்துக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டால்கூட சதிகளை முறியடித்து, சவால்களை எதிர்கொண்டு, தடைகளைத் தாண்டுவதற்கு 4 மாதங்கள் போதுமா என்ற வினா எழும்புகின்றது.

குறிப்பாக சிறுபான்மையின மக்கள் தமக்கான பாதுகாப்பு அரணாகவே ஐக்கிய தேசியக் கட்சியை கருதுகின்றனர். இதன்காரணமாகவே அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்கூட ஐ.தே.கவுடன் கூட்டு வைக்கின்றன. மக்களும் வாக்குகளை வாரி வழங்குகின்றனர்.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் சிங்கள, பௌத்த கொள்கையை முன்னிறுத்தி வருகின்றனர். தமிழ் பேசும் மக்களுக்காக குரல் எழும்பும் ராஜித, மங்கள சமரவீர போன்றவர்களுக்கு கதவடைப்பு செய்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்காகப் பிக்குமார்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

எனவே, ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக ஏனைய தரப்புகளை ஐக்கிய தேசியக்கட்சி புறக்கணிக்குமானால் அக்கட்சிக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

எனினும், மகாநாயக்க தேரர்களை விமர்சித்தல், பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுதல் போன்ற தவறுகளைத் திருத்திக்கொண்டு தற்போதைய கொள்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி பயணிக்குமானால் மீள் எழுச்சிக்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

ஜே.வி.பி., கூட்டமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரு பிரதான கட்சிகளுடனேயே சிறு கட்சிகள் கூட்டணி அமைத்துக் களமிறங்கும்.

எனினும், ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தனித்தே போட்டியிடும். இவ்விரு கட்சிகளும் தனிவழிப்பயணம் மேற்கொள்வதாலேயே நாடாளுமன்றத் தேர்தலின்போது மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும் கைப்பற்றின. இம்முறை அத்தொகையை அதிகரித்துகொள்வதற்கே இரு தரப்புகளும் முயற்சிக்கும்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இம்முறை 16 ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா அல்லது வீழ்ச்சி ஏற்படுமா என்ற வினாவும் எழுகின்றது.

ஏனெனில் மொட்டுக் கட்சிக்காரர்களால் வடக்கு, கிழக்கில் மாற்றுத் தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வடக்கு, கிழக்கில் போட்டியிட்டால் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …