இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம்: தமிழரசுக் கட்சியிலிருந்து ரதன் இடைநிறுத்தம்!

- சத்தியலிங்கம் தெரிவிப்பு

மாணவியொருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதனை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமது கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் இன்று தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்று எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று கூடிய தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை ஆராய்ந்திருந்தது. இந்தநிலையில், அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன், விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று முடியும் வரை அவர் கட்சிலியிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கபட்டமைக்கமைய அவர் கட்சியின்உறுப்புரிமை மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்” – என்றார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் அங்கு கல்வி பயிலும் 17 வயது மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று செட்டிகுளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்திருந்ததுடன் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவாகவும் இருந்தவராவார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close