இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர் தாயகத்தைப் பழிவாங்கும் கோட்டா அரசு!

- நிதி விடுவிப்பில் இழுபறி; அபிவிருத்திகள் முடக்கம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிற்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. முடிவுறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் விடுவிக்கப்படாத நிலைமையும் உருவாகியுள்ளது. இதனால் தமிழர் தாயகத்தில் அபிவிருத்திப் பணிகள் தேங்கும் அபாயம் தோன்றியுள்ளது.

கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிதிகள் ஒதுக்கப்பட்டன. அவை, கிராமிய உட்கட்டமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சு, தேசிய நல்லிணக்க அமைச்சு, மீன்பிடி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் என்பவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மட்டும் 8 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கோட்டாபய தலைமையிலான அரசு உருவாக்கப்பட்டது. நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சகல திணைக்களங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ஒப்பந்தம் வழங்கப்படாத அபிவிருத்தித் திட்டங்கள், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டும் ஆரம்பிக்கப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு பணிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 200 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

6 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்குரிய அபிவிருத்திப் பணிகள் முடிவுறுத்தப்பட்டிருந்தன. ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் முடிவுறுத்தப்பட்டாலும், அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதனால் ஒப்பந்தகாரர்கள் மாவட்டச் செயலகங்களுக்கு நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சில அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிற்கின்றன. கட்டம் கட்டமாக இவை முன்னெடுக்கப்படுவதால் அவற்றுக்குரிய அடுத்த கட்ட நிதிகள் கிடைக்கப் பெறாமல் இடைநடுவில் நிற்கின்றன.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான நிதி விடுவிப்பில் இவ்வாறான சிக்கல்கள் ஏதுமில்லாததால், அபிவிருத்திப் பணிகள் வழமைபோல இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு!

Tags
Show More

Related Articles

Back to top button
Close