Breaking News

கூட்டமைப்பின் பங்காளிகள் ஒன்றித்துச் செயற்பட முடிவு!

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவது என்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி பிளவுபடாமல் செயற்பட வேண்டும். அவ்விதமான ஒற்றுமையே இன்றைய காலத்தில் அவசியம்” என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டமைப்பின் பெயரில் செயற்படும் மூன்று கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியனவற்றின் தலைவர்களும் ஏனைய உறுப்பினர்களும் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாகக் கூடிப் பேச்சு நடத்தினார்கள்.

மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றன. ஒருமித்து – ஒற்றுமையாக – ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குவதென்று இதன்போது முடிவு எடுக்கப்பட்டது. மேலதிகமான கருமங்கள் என்ன விதமாகக் கையாளப்பட வேண்டுமென்பது பற்றியும் பேசப்பட்டது.

உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். அந்தக் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் மீண்டும் கூடி ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேர்தலை எதிர்நோக்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி – தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒன்றாகக் கூடி தங்களது பலத்தை இந்தத் தேர்தல் மூலமாக வெளிக்கொணரவேண்டுமென்பதே எங்களது கருத்து. இன்றைய காலகட்டத்தில் அவ்விதமான ஒற்றுமை அத்தியாவசியம்.

ஓர் அரசியல் தீர்வைப் பெறுவதற்கும் ஏனைய கருமங்களைக் கையாள்வதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து – ஒற்றுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் பின்னால், அவர்களுக்காக நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த கட்சியின் பின்னால், அவர்களுக்காகச் செயற்படக் கூடிய ஒரேயொரு கட்சியின் பின்னால் நிற்க வேண்டியது அத்தியாவசியம் என்று எமது உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கூறினார்கள்.

அதுதான் தமிழ் மக்களுடைய கருத்து என்பதிலும் ஐயம் இருக்க முடியாது. ஆனபடியால் நாங்கள் மீண்டும் விரைவில் கூடி ஏனைய கருமங்கள் சம்பந்தமாக முடிவு எடுத்து அவை மக்களுக்கும் அறிவிக்கப்படும்” – என்றார்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …