இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.நாவுடன் முட்டிமோதினால் இலங்கைக்குத்தான் ஆபத்து!

- ராஜபக்ச அரசுக்கு ரணில் கடும் எச்சரிக்கை

“உலக வல்லரசு நாடுகள்கூட ஐ.நாவின் தீர்மானங்களை மதித்துத்தான் நடக்கும். அதனை உதறி எறிய எந்த நாடுகளும் முன்வருவதில்லை. ஆனால், ராஜபக்ச தரப்பினர் ஐ.நாவுடன் முட்டிமோதும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டுக்குத்தான் பேராபத்தாக அமையும்.”

– இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

இலங்கை மீதான ஐ,நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த அதனை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ,நா. மனித உரிமைகள் சபையில் தற்போது இருக்கும் தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன்தான் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் எமது அரசு மீதான தீர்மானம் அல்ல. அதேபோல் ராஜபக்ச அரசு மீதான தீர்மானமும் அல்ல. அது எமது நாடு மீதான தீர்மானமே ஆகும். இதை விளங்கிக்கொள்ளாமல் ராஜபக்ச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ராஜபக்ச அரசு தலைமையும், அந்த அரசில் உள்ள உறுப்பினர்களும் சர்வதேச நாடுகள் தொடர்பிலோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் குறித்தோ கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஐ.நாவில் மேலும் கால அவகாசம் கோருவதுடன் தீர்மானத்தையும் திருத்துவோம் என ஒரு தரப்பினரும், அந்தத் தீர்மானத்தை அடியோடு நிராகரித்துக் குப்பையில் தூக்கி வீசுவோம் என இன்னொரு தரப்பினரும், ஐ.நாவின் சவாலை நட்பு நாடுகளுடன் இணைந்து முறியடிப்போம் என மற்றொரு தரப்பினரும் என ராஜபக்ச அரசில் உள்ளவர்கள் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். எனவே, இலங்கை மீதான ஐ.நாவி ன் தீர்மானத்தை மதித்து அதனை நடைமுறைப்படுத்தும் வழிகளை இந்த அரசு பார்க்க வேண்டும்” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close