Breaking News

தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்

தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், 110 மாடிகளை கொண்ட நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர்.

2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும். இந்த தாக்குதல்களில் ஏதும் அறியாத அப்பாவி மக்கள் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். 10 பில்லியன் டாலர் சொத்துகள் (சுமார் ரூ.72 ஆயிரம் கோடி) நிர்மூலமாக்கப்பட்டன.

உலகையே உலுக்கியெடுத்த இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்தனர்.

இதன் காரணமாக 2001-ம் ஆண்டு, அக்டோபர் 7-ந் தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை தூக்கி எறிந்து, மக்களாட்சியை மலர வைத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு 19 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக 12 ஆயிரம் அமெரிக்க கூட்டுப்படை வீரர்கள் இருந்து வருகின்றனர்.

அந்தப் படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது. இதில் 2,400 அமெரிக்க படை வீரர்கள் பலியாகினர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.

25 லட்சம் மக்கள், வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். 20 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில்தான், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்பியது. இதையொட்டி தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது. பல முறை அந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது.

நீண்ட இழுபறிக்கு பின்னர், கடைசியில் ஒரு வழியாக அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் 29-ந் தேதி (நேற்று) அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக 31 உறுப்பினர்களை கொண்ட தலீபான் தூதுக்குழு தோஹா விரைந்தது.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதை நேரில் பார்வையிட தனது நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தோஹாவுக்கு அனுப்பி வைத்தார்.

எதிர்பார்த்தபடியே, தோஹாவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மைக் பாம்பியோ முன்னிலையில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜாத்தும், தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து போட்டனர்.

ஏனென்றால், இதன் மூலம் 19 ஆண்டுகளாக நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருகிறது.

தினந்தோறும் குண்டுவீச்சுகளையும், ஏவுகணை தாக்குதல்களையும், ராக்கெட் வீச்சுகளையும், துப்பாக்கி சூடுகளையும் பார்த்து நிலை குலைந்து போய், இனி ஒரு விடியல் வராதா என்று ஏங்கித்தவித்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது. அவர்கள் ஆனந்த கூத்தாடினார்கள். புறாக்களை பறக்க விட்டனர்.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கூட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் வெளியிட்டன.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், 135 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் எண்ணிக்கை 8,600 ஆக குறைக்கப்படும்.

* 14 மாதங்களில் நேட்டோ படை வீரர்கள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள்.

* ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். இது வரும் 10-ந் தேதி, நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் தொடங்கும்.

* இரு தரப்பு கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள். (5 ஆயிரம் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் காவலில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் படையினர் 1000 பேர் தலீபான்கள் காவலில் இருக்கின்றனர்.) என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, அல்கொய்தா பயங்கரவாதிகளுடனான தொடர்புகளை தலீபான்கள் விட்டுவிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வலியுறுத்தி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமானால், அங்கு வெளியில் இருந்து வருகிற பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆப்கானிஸ்தானிடம் இந்தியா கூறி உள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் முழுமையான அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவதற்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிளாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …