முக்கிய செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு: வைகோ கண்டனம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் அலட்சியப் போக்கில் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் சொத்து வரியை நூறு விழுக்காடு உயர்த்துவது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருவதால் நகராட்சி நிர்வாகத்தில் தேக்க நிலைமை உருவாகி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய ரூ.3500 கோடி நிதி உதவியும் தடைப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் சீரழிந்துள்ளதால்தான் சொத்துவரி வசூலிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணமாகக் காட்டி, சொத்து வரியை ஒரேயடியாக நூறு விழுக்காடு உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது.

1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என்று அரசு கூறுவதும் ஏற்கக் கூடியது அல்ல. ஏனெனில் 2011 ஆம் ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிமுக அரசுதான் பொறுப்பில் இருக்கிறது. மக்களைப் பாதிக்காத வகையில் அவ்வப்போது சொத்து வரியை மாற்றி அமைத்திருக்கலாம். அதைவிடுத்துவிட்டு, தற்போது ஒரே சமயத்தில் சொத்து வரி உயர்த்தப்படுவது மக்களுக்கு பெரும் சுமையாகும்.

எனவே தமிழக அரசு உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதுடன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து, அதன் பின்னர் உரிய வகையில் சொத்து வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

https://tamilnewsstar.com/headlines-news/president-trump-s-comment-make-fun-of-it-tweeted-actor-siddharth

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close