Breaking News

வேலணையில் கோட்டாவின் கட்சியினர் அராஜகம்!

வேலணைப் பிரதேச சபையில் நேற்றுப் பெரும் களேபரம் இடம்பெற்றது. பிரதேச சபை வாகனத்தின் முறையற்ற பாவனை தொடர்பான விவாதம் கைகலப்பாக மாறியது. இதில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினரான சிவராசா போலின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தார் என்று தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபயவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த சபையின் உப தவிசாளர் சிவராசா போல் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் க.நாவலனால் முன்வைக்கப்பட்டது.

“தவிசாளரின் வாகனத்தை உப தவிசாளர் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார். இது தொடர்பில் நான் பிரஸ்தாபித்தேன். தற்போது உப தவிசாளராக உள்ள சிவராசா, 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இதே சபையில் தவிசாளராக ஈ.பி.டி.பியின் சார்பில் இருந்தவர். அந்தக் காலத்தில் சபையின் பதிவில் இல்லாது 30 வாகனங்கள் வரையில் இருந்தன. அவற்றின் உதிரிப்பாகங்கள் கழற்றி விற்பனையும் செய்யப்பட்டன. இது தொடர்பில் எல்லாம் தெரிவித்தும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையே சுட்டிக்காட்டினேன்’ என்று நாவலன் தெரிவித்தார்.

உப தவிசாளர் சிவராசா போல் தனது விளக்கங்களைக் கூறினார். சபையில் குழப்ப நிலை இதன்போது தோன்றியது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும், உப தவிசாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சபைக்கு ஒவ்வாத வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அச்சுறுத்தும் தொனியிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் உப தவிசாளருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

உப தவிசாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் தவிசாளரைக் கோரினர். ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படாத நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.

இதன்போது, உப தவிசாளர் சிவராசா போல், தன்னைத் தாக்கியதாக கூட்டமைப்பு உறுப்பினர் க.நாவலன் தெரிவித்தார். நாவலன் தனது முகத்திலும், நெஞ்சிலும் சிவராசா தாக்கியதாகத் தெரிவித்து ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் காயங்களுடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர் க.நாவலன் தெரிவித்ததாவது:-

“சபை அமர்வில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மீது சபை வாகனத்தைப் பயன்படுத்தியது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றன. சபையில் அமளி ஏற்பட நாம் வெளி நடப்புச் செய்ய முயற்சித்தோம். அப்போது உறுப்பினர் என்னைத் தாக்கினார். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் உறுப்பினர் சிவராசா போல் தெரிவித்ததாவது:-

“சபை வாகனம் பயன்படுத்தியமை தொடர்பில் விவாதம் நடந்தது. நான் கதைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

விளக்கமளிக்க முற்பட்டபோது மாறுபட்ட கருத்துக்களை சபையில் உள்ளவர்கள் தெரிவித்தனர். கூட்டமைப்பு உறுப்பினர்தான் தாக்குவதற்கு முற்பட்டார். நான் இப்போது வைத்தியசாலையில் உள்ளேன்” என்றார்.

காயமடைந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நாவலனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டார்.

சிவராசா போல் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக வேலணைப் பிரதேச சபை தவிசாளராகக் செயற்பட்டவர். இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதும் போனஸ் ஆசனத்தின் மூலம் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உப தவிசாளராகத் தெரிவானார்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …