Sunday , December 16 2018
Home / Poems / வெளிநாட்டு மாப்பிள்ளை
வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெள்ளைத் தோல் என்றாள்
வெளுத்ததெல்லாம் பால் என்றாள்
கொள்ளை அழகு என்றாள்…
வெளிநாட்டு மாப்பிள்ளையாம்…

ஓலைக் குடியில் வாழ்ந்தவள்..
சேலை மறந்தாள்……
சாலையில் காலையும் மாலையும்
குட்டைப் பாவாடையில்
கும்மாளம் அடித்தாள்…..

அலிசேஷன் நாயுடன்
அங்காடிக்கு வந்தாள்….
ஊர்நாய்களை கண்டே
உதட்டைச் சுழித்தாள்….

தலைமுடி சுருட்டினாள்…..
இங்கிலீசில் வெருட்டினாள்….
அதிகாலை வரை அலைபேசியில்
SMS உருட்டினாள்…….

தனிமையில் சிரித்தாள்..
தாயையும் முறைத்தாள்…
ஹை – ஹீல்ஸ் போட்டு
ஸ்கூட்டரில் முறுக்கினாள்….

நட்சத்திர விடுதிகளில்
இரவுகள் கடந்தாள்….
நெய்ல் பாலிஷ் போட
பாலரில் கிடந்தாள்….

கொறிக் கிறீம் பூசி..முகக்
கரி கழுவினாள்…
பரிகாசச் சிரிப்பினில்
நாகரிகம் நழுவினாள்…..

இன்று கலியாணம்…
முன்னாள் காதலன்
முடியை வளர்க்க…இன்று
அவள் அயலானுக்கு
அனைத்துமாகிறாள்….

விமானம் ஏறினாள்….
வெளிநாட்டில் இறங்கினாள்…
அவளை அவளே
வெள்ளைக்காரியாய் அறிகிறாள்…

பத்தாவது மாதம்
முத்தொன்றை தருகிறாள்..
அம்மாவாகிய அதன்பின்னே
உண்மை அறிகிறாள்…
அவளுக்கு அவன் முதல் புருஷன்..
அவனுக்கு அவள் மூன்றாம் மனைவி…

ஓயாது அழுது ஒன்றுமாகாமல்
ஆயா வேலை அவள் தொடங்க
அவன் விமானம் ஏறுகிறான்..
அடுத்த பெண் தேடி….

வெள்ளைத் தோல் என்றாள்..
வெளுத்ததெல்லாம் பால் என்றாள்

***சூ.ஜெயகிருஸ்ணா***

Check Also

சோறு போடுவான் சொந்த மகன்