இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழர் விரும்பும் தீர்வை ஒருபோதும் வழங்கோம்! – கோட்டா அரசு இறுமாப்பு

“எமது நாட்டின் இறையாண்மையையும் ஒற்றையாட்சியையும் நாம் பாதுகாத்தே ஆகவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை விட்டுக்கொடுக்கவே முடியாது. எனவே, அதற்கமைய அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்.”

– இவ்வாறு நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலையுடன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரின் கவலை எமக்குப் புரிகின்றது. அதேவேளை, அவர் எமது ஜனாதிபதி மீதும் எமது அரசு மீதும் வைத்துள்ள நம்பிக்கையை நாம் பாராட்டுகின்றோம்.

எனினும், தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் நூறு வீதம் விரும்புகின்ற அரசியல் தீர்வை எம்மால் வழங்க முடியாது. அவர்கள் பிளவுபடாத – ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி வழியிலான தீர்வையே விரும்புகின்றார்கள். அப்படியான தீர்வை எம்மால் பெற்றுக்கொடுக்கவே முடியாது. அப்படியான தீர்வுக்குச் சிங்கள மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கவேமாட்டார்கள்.

எமது நாட்டின் இறையாண்மையையும் ஒற்றையாட்சியையும் நாம் பாதுகாத்தே ஆகவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது. எனவே, அதற்கமைய அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close