இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

வடமாநிலங்களில் கனமழையால் 130 பேர் உயிரிழப்பு

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது.

பீகாரில் கனமழையால் பாட்னா, பகல்பூர், கைமுர் மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநில, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழுக்களாக பிரிந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இந்திய விமானப்படை விமானங்களும் உணவுகளை வினியோகித்து வருகிறது.

30-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்தான நிலையில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் துணை முதலமைச்சர் சுசில் மோடி, வேளாண் அமைச்சர் பிரேம்குமார் உள்பட பல அமைச்சர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

சுசில் மோடி மீட்கப்பட்ட நிலையில், பிரேம் குமார் அவரது வீட்டின் முதல் தளத்தில் தங்கியுள்ளார். பாட்னாவில் காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களையும் வெள்ள நீர் சூந்துள்ளது.

நாளந்தா மருத்துவமனையில் மழை நீர் புகுந்த பிரிவுகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

கிழக்கு உத்தர பிரதேசத்தில் 93 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ள பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக அம்மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லையா, ஜான்பூர், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல்லையா மாவட்ட சிறையில் தண்ணீர் புகுந்த நிலையில், அங்கிருந்த 900 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குஜராத்திலும் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. துவாரகா பகுதியிலுள்ள கோவில் மழை வெள்ளத்தில் பாதியளவு மூழ்கியது.

ஜுனாகத், போர்பந்தர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டியும், படகுகள் மூலமும் மீட்கப்பட்டனர்.

மேற்குவங்கத்தில் சிலிகுரி, திபார் உள்ளிட்ட பல பகுதிகளில் மழையால் வீடுகள், அரசு அலுவலகங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மால்டா உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

மேலும் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழைப் பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close