Sunday , December 16 2018
Home / Poems / இருளில் தவறிய எழுத்துப் பிழைகள்

இருளில் தவறிய எழுத்துப் பிழைகள்

***இருளில் தவறிய
எழுத்துப் பிழைகள்…***

மாலையானது…..
கூடுகளை நோக்கி
திரும்பின பறவைகள்….
காடுகளை வெட்டி
விறகுகள் கட்டி..
வீடுகளை நோக்கியே
விரைந்தோம்..நாம்…!!!

ஓய்வாய் அமர
சாய்வு நாற்காலி தேடினேன்….
பாய்தான் கிடைத்தது….என்
நாற்காலி இடம்மாறி விட்டதாம்..
அம்மாவின் பதிலால்
அதிர்ச்சி அடைந்தேன்…என்
மௌனம் பதில் சொன்னது….

இருள் மெதுவாய் எட்டிவிட
பொருள் வாங்க கடை சென்றேன்
சந்திகளின் பொந்துகளில்
ஏதோ எல்லாம்
எட்டிப் பார்க்கின்றன….

மூலைக் கடையில்
சாக்கடை நாறுகிறது….அது
மூன்று வருடங்களுக்கு
முன்னர் மூடப்பட்டது….
நினைவிருக்கிறது எனக்கு…

வெள்ளை வான் ஒன்று
வேகமாய்க் கடந்து..
என் முன்னே ஏனோ
ஓரங்கட்டி நிற்கின்றது….

வெருண்டடித்து
வேட்டியை மடித்து..
திரும்பி நடக்கிறேன் வேகமாய்..
எனை யாரோ அழைப்பது
கேட்டும் கேட்காதது போல்….!!

ஒரு வழியாய் ஓடி..
ஒதுங்கி நின்று பார்த்தேன்…
அவர்கள்
இன்னொருவனை
இழுத்து ஏற்றிக் கொள்கிறார்கள்

இன்று ஏன்..
இந்த மாற்றம்….??
என்னைச் சுற்றி
ஏதோ நடக்கிறது…

முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட
முட்கம்பி வேலிகளில்..
முட்கள் புதிதாய்
முகவரி தேடி
முகங்காட்டிச் சிரிக்கின்றன….
இன்றைய நிலவை
முகிற் கூட்டம் மறைக்க
அழுது தீர்க்கிறது வானம்…

இனி…
இனம்புரியா
ஏக்கங்கள் மீளும்…
காணாமல் போனோர்
பட்டியல் நீளும்………!!!!!!!!!!!!

நாய்களின் ஊளைச் சத்தம்
நாளைய விதியை
நாசூக்காய் சொல்ல…இனி
வீதிகளில் மட்டுமல்ல…எம்
விதிகளிலும் கரி பூசப்படும்…

வரும் வழியில் என் நாற்காலியில்
இன்னொருவன் குந்தியிருக்க
இழுத்துப் பிடித்து..
கழுத்தை நெரித்து…
உரிமை கேட்டேன்….
என் பெயரை எழுதிக் கொண்டது
காணாமற்போனோர் பட்டியல்.

இரவில் சூரியன் உதிக்கும் நாடு
நோர்வே என்றும்…
இரவில் ஆட்சி மாறும் நாடு
இலங்கை என்றும்…உன் மகன்
பொது அறிவு படிக்கக் காண்பாய்
வருங்காலத்தில்….
***சூ.ஜெயகிருஸ்ணா***

Check Also

சோறு போடுவான் சொந்த மகன்