Thursday , July 18 2019
Breaking News
Home / கவிதைகள் / உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே
உனக்குத் தெரியும்

உனக்குத் தெரியும்.. வயல்வெளிக் காற்றே

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் எங்கள் மூச்சென்றால்..
தமிழீழம் எங்கள் தாயென்றால்
தாயின் கற்புக் காக்கவே..எம்
தாய்மை துறந்தோம் நாம்…….

தமிழை வளர்ப்பதற்கே-எம்
தலைமுடி அறுத்தோம்..
தலைவனின் சிரிப்பிலே
அம்மாவைக் கண்டோம்..

வலி மறந்து…இரவில்
விழி திறந்து — நாம்
புலி உடை தழுவியது..எம்
மொழியது வாழ்வதற்கே…..

எனக்கு நினைவிருக்கிறது…
இதோ இந்தப் பனைமர அடியிலே
பனங்காய் பொறுக்கி..
பசி போக்கியிருக்கிறோம்…

நரிகளின் வாய்கள்- மீண்டுமொரு
கிரிசாந்தியை
நாசமாக்குவதை தடுக்கவே
நாமன்று நெருப்பானோம்….

அதோ…அங்கே..
என் தோழிகள்…அவர்கள்
தமிழை கொன்றவைகளை
கொழுத்திய கொற்றவைகள்..

எமக்கும் காதல் உண்டு..
தமிழில் மட்டுமே….
அதனாலே தான்
இறந்தாலும் வென்று விடுகிறோம்.

நீங்கள் கனவு காணவே..
நாம் தூக்கம் தொலைத்தோம்..
நீங்கள் வலி காணாதிருக்கவே
நாம் வெடிகுண்டு சுமந்தோம்..

தாயுடன் நீர் வாழ – நாம்
தனி மரமானோம்…
இன்றே இறந்தாலும்
தமிழுக்கு உரமாவோம்…

உலர் உணவில்
பலர் பசி முடித்தோம்…
ஐந்து லீற்றர் தண்ணீரை
ஐம்பது பேர்
ஐந்து நாள் குடித்தோம்….

இரவுகளை
மண்ணுக்காய் மறந்தோம்..
உறவுகளை
விரும்பியே துறந்தோம்…

பெண்களின் கூந்தலில்
பூவாசம் வீசும் என்பது
எங்களுக்குப் பொய்யாகும்..
கூந்தலில் குருதி வாடையும்
வியர்வையில் குருதிச் சூடும்
என்றுமே கலந்திருக்கும்….

பல தூரம் நடப்போம்..
பற்றைக்குள் கிடப்போம்…
பல் வலித்தாலும்..
பாம்பு கடித்தாலும்..
மௌனமே எமது அலறல்…

கடவுளின் சூழ்ச்சியால்
கயவனிடம் சிக்கினால்
கழுத்தின் சயனைட்
கற்பினைக் காக்கும்…

உயிருக்குப் பயந்தோ…
உணர்ச்சிக்குப் படிந்தோ…
ஒருபோதும்…
கற்பை தொலைத்ததில்லை..அது
உனக்குத் தெரியும்…
வயல்வெளிக் காற்றே……..

***சூ.ஜெயகிருஷ்ணா***


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

வந்த மண்ணிலும் சொந்தக் குரல்

“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….”

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!62Shares“வந்த மண்ணிலும் சொந்தக் குரல்….” தரணியின் மண்மீதிலும் தயவான சொற்களோடே தன்மானம் காத்திடுமே தமிழனின் மொழியாகுமே….. சொந்தக்குரலிலே …