மத்திய மாகாண அளுநர் தலைமையில் 50 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்

Spread the love

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பட்டதாரிகளின் சேவைகளை வளவாளர்களாகப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் பூரண நிதிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்துகின்றது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யு. கமகே தலைமையில் கண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது.

இதன் கீழ் 50 வளவாளர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மாகாண கல்வி அமைச்சின் உடன்படிக்கையின் கீழ் ஹட்டன் கல்வி வலய அலுவலகத்தின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாடசாலை கல்விக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்நிகழ்வில், ​​மத்திய மாகாண மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். விஜேந்திரன், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்ட இயக்குநர் கந்தையா விக்னேஸ்வரன், பெருந்தோட்டக் கல்வி இணைப்பாளர் எம்.பி. சந்திரசேகரன், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் IMHO அமைப்பின் அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.