அகில இந்திய அளவில் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகிறது. ராமேசுவரத்தில் ராமர் பாதம், ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில், தனுஷ்கோடி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம், அப்துல் கலாம் வீடு உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.
அதுபோல் ராமேசுவரத்திற்கு பஸ்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ராமேசுவரத்தில் இருந்து வாடகைக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலமே இந்த சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பஸ்கள் சேவையும் தொடங்கப்படுகிறது.
இன்று இந்த சிறப்பு பஸ் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது:-
ராமேசுவரத்தில் உள்ள சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 புதிய சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இந்த புதிய சிறப்பு பஸ்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.இதற்காக பயணி ஒருவருக்கு ரூ.80 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 42 பேர் பயணம் செய்யலாம்.
பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பஸ் லட்சுமண தீர்த்தம், ராம தீர்த்தம் வழியாக அக்னி தீர்த்த கடற்கரை செல்லும். அங்கிருந்து ராமர் பாதம், அப்துல் கலாம் வீடு, ரெயில் நிலையம், கலாம் நினைவிடம் சென்று விட்டு மீண்டும் பஸ் நிலையம் வரும். இந்த பஸ் ஏறும் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கிவிட்டு மீண்டும் இதே சிறப்பு பஸ் வந்தால் அந்த டிக்கெட்டை காண்பித்து எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். முதல் கட்டமாக இந்த சிறப்பு பஸ் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.