உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. அவை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கலவரமடையத் தேவையில்லை.
கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இந்த விசாரணைகளை முறையாக முன்னெடுத்திருந்தால் தற்போது பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு கைது செய்திருக்கவும் முடியும்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணைகளை மறைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
சில விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலான சாட்சிகள் மறைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில் கடந்த 6 மாதங்கள் மாத்திரமே விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதற்காக கலவரமடைகின்றர் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும்.
அண்மையில் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிள்ளையான் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டமையை மாத்திரம் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருகின்றன.
அவை தொடர்பில் தற்போதும் மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கப்படும் போது கிடைக்கப் பெறும் தகவல்களில் பெரும்பாலானவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன.
இவை தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகள் மிகவும் சிக்கலானவையாகும்.
கர்தினால் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையக் கூடியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சூத்திரதாரி யார்? அவர் ஒருவரா பலரா? அது குறித்து எப்போது அறிவிப்பது என்ற பொறுப்புக்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்போம்.
எவ்வாறிருப்பினும் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான கால வரையறையை எம்மால் தற்போது கூற முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித தவறும் இல்லை. அவரால் கூறப்பட்டதைப்போன்று தற்போது ஒவ்வொரு காரணிகளாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் அடிப்படையிலேயே அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. விசாரணைகளுக்கு தேவையான உதவி, ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் மாத்திரமே அரசாங்கத்தின் தலையீடு காணப்படுகிறது என்றார்.