ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை – பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியிடப்படாத விசாரணை அறிக்கையொன்றை இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தினார்.

குறித்த அறிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தயங்கியமைக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 2019 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் 2021 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டதுடன், அப்போதே அந்த அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அது கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்டதுடன், நாடாளுமன்ற வாசிகசாலையிலும் வைக்கப்பட்டது.

அதேநேரம், செனல் 4 தொலைக்காட்சியினால் வெளிப்படுத்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையிலான இந்த குழுவின் அறிக்கை 2024 ஜூன் மாதம் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் குறைபாடுகளைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அதன் அறிக்கையைக் கையளித்தது.

அந்த அறிக்கையின் 40 ஆவது பக்கத்தில், சஹ்ரானின் தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பிரதானி பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அரச புலனாய்வு சேவையினால் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி குறித்த கடிதம் அவரது மேசைக்கு வரும்போது, அவர் வெளிநாட்டிலிருந்ததாகவும் 16 ஆம் திகதியே கடிதத்தைப் பார்த்ததாகவும் அவர் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், அவர் வெளிநாட்டிலிருந்தபோது பதில் கடமைகளைப் பிரதி காவல்துறைமா அதிபர் நாகஹமுல்ல ஆற்றியிருந்தார்.

எனினும், தமக்கு வரும் இரகசிய கடிதங்களைப் பிரிக்க வேண்டாம் என ரவி செனவிரத்ன அவரிடம் கூறிச் சென்றிருந்தார்.

எனவே, குண்டுதாரிகள் கொழும்பு வரும்போதும் கூட அந்த கடிதம் கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது என்று புலப்படுகிறது.

அவர் கடிதத்தை முழுமையாகப் பார்க்காமல், அதிலுள்ள விடயம் தொடர்பில் ஆராயுமாறு மே முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்குகிறார்.

2019 ஜனவரி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை சஹ்ரான் தொடர்பில் 13 அறிக்கைகள் புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன.

சஹ்ரான் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்த ரவி செனவிரத்னவுக்கு மட்டுமே இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை அறிந்து செயற்பட்டிருக்க முடியும்.

குறித்த கடிதத்தின் தீவிரமின்மையை அவர் அறிந்திருந்தால் ஏப்ரல் 18 ஆம் திகதியே சஹ்ரானை கைது செய்திருக்க முடியும்.

அதன்படி, குறித்த அறிக்கையின் 41 ஆவது பக்கத்தில், கடமையைச் சரிவர நிறைவேற்றாமை தொடர்பில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில், தற்போதைய அரசாங்கத்தில் அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் காவல்துறையினரால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக்கோரி உயர் நீதிமன்றில் அவர் வழக்கொன்றையும் முன்னதாக தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறிருக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதால் காவல்துறைக்குச் சுயாதீன விசாரணை செய்யமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அவரை அந்த பதவிக்கு நியமித்தபோது, அவர் குறித்த பதவிக்குத் தகுதியற்றவர் என நாம் கூறியபோதிலும் ஜனாதிபதி அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

அதேநேரம் அல்விஸ் அறிக்கையின் 14 ஆவது பக்கத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவுக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, உயர் பதவிகளுக்கு பொருத்தமானார்களை நியமிக்க முடியாமல் போனதன் இயலாமையின் காரணமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த அறிக்கைகளை வெளியிடுவதில் பின்வாங்கியதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறிப்பாகத் தாம் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்தவர்களைப் பாதுகாப்பதற்காகவே அந்த அறிக்கை மூடிமறைக்கப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைச் செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கேக்கு அந்த அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு போதிய கால அவகாசம் இருந்திருக்கவில்லை. முதல் மாதத்திலேயே தற்போதைய புதிய அரசாங்கம் பாரிய தவறுகளை இழைத்துள்ளது.

இந்த அறிக்கையை மூடிமறைக்க முயன்றதன் மூலம் ஜனாதிபதி அனுரகுமார அதிகார துஷ்பிரயோகம் செய்து, அரசியலமைப்பையும் மீறியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் தகவலறியும் உரிமையையும் அவர் கடுமையாக மீறியுள்ளார்.

இது ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டு வருவதற்கு வழிவகுக்கும் காரணிகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைகளை மேற்கொள்வதாக அவர் கூறியதும் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அறிக்கையில் மேலும் 17 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியிலிருந்து ரவி செனவிரத்ன உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

அத்துடன், இந்த அறிக்கையை வெளியிடாமைக்காகப் பொதுமக்களிடமும் ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

அல்லாவிடின் புதிய நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டுவரப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது ஒரு அறிக்கையை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ளதாகவும், மற்றைய அறிக்கையை எதிர்வரும் 28 ஆம் திகதி பகிரங்கப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …