இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தைப் பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.
அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப்பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாகத் துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் மகிழ்ச்சியானதும், அர்த்தமுள்ளதுமான தீபாவளி பண்டிகையாக இன்றைய பண்டிகை அமைய வேண்டுமெனவும் அவர் தமது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியின் போது, ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது போன்று, நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்க வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.