நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு!

0
5

நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் விதித்த சகல இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தி முடித்ததன் காரணமாக அரச புலனாய்வு சேவை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன செலுத்திய வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையினையும் செலுத்தியுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதியளவான புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், அந்த தாக்குதலைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பான வழக்கில் அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு விதிக்கப்பட்டிருந்த 75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையின், எஞ்சிய 65 மில்லியன் ரூபாவை முழுவதுமாக செலுத்தியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் அண்மையில் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நிலந்த ஜயவர்தனவும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த முழுத்தொகையினையும் அவர் செலுத்தியுள்ளதாக இழப்பீடுகளுக்கான அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக, நிலந்த ஜயவர்தன சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த இழப்பீட்டைச் செலுத்துவதற்குக் காலதாமதம் ஏற்பட்டமைக்காக நிலந்த ஜயவர்தன நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் இந்த வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.